அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை கவர்னர் திரும்ப பெற வேண்டும்


அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தை கவர்னர் திரும்ப பெற வேண்டும்
x
தினத்தந்தி 27 March 2018 3:45 AM IST (Updated: 27 March 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தர் நியமனத்தை கவர்னர் திரும்ப பெற வேண்டும் திருமாவளவன் கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியேற்று விழா நடந்தது. அதில் பங்கேற்கவும், நாமக்கல்லில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நாமக்கல் வந்தார். முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு முடிய 2 நாட்கள் மட்டுமே உள்ளது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள சூழலில் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடும் என்பதற்கு வாய்ப்பே இல்லை. மேற்பார்வை ஆணையம் அமைக்க உள்ளோம் என மத்திய அரசு முன்மொழிந்து இருப்பது ஏற்புடையதல்ல. இது தமிழகத்திற்கு செய்கிற பச்சை துரோகம். எனவே மீண்டும் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

திரும்ப பெற வேண்டும்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக பா.ஜ.க. மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், 3 பேர் கொண்ட குழு டெல்லிக்கு புறப்படுவதாக கூறியதாக தெரிகிறது. பா.ஜ.க தலைவர்கள் மட்டுமே பிரதமரை சந்தித்து முறையிடுவதன் மூலம் மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் என நம்ப வாய்ப்பு இல்லை. இது ஒரு கண் துடைப்பிற்கான முயற்சியே தவிர, வேறு இதில் எந்த பயனும் ஏற்பட போவதில்லை.

டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூர்ய நாராயண சாஸ்திரியை கவர்னர் தன்னிச்சையாக நியமனம் செய்திருக்கிறார். தேர்வுக்குழு பரிந்துரைக்கும் மூவர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒருவரை தான் அவர் தேர்வு செய்ய முடியும். அது தான் அவருக்கு வழங்கப்பட்டு உள்ள அதிகாரம். ஆனால் அந்த பட்டியலில் இடம் பெறாத ஒருவரை அவர் நியமனம் செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது தமிழக அரசையே அவமதிக்கும் செயல். கவர்னர் அதை திரும்ப பெற வேண்டும்.

ஈரோட்டில் நடந்த தி.மு.க மாநாடு வெற்றிகரமாக நடந்து இருக்கிறது. அதற்கு வாழ்த்துக்கள். ரஜினி அதிகாரபூர்வமாக கட்சி அறிவிக்கவில்லை. நண்பர் கமல் கட்சியை அறிவித்திருந்தாலும் கூட இன்னும் தீவிரமாக அவர்கள் அரசியலில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார். 

Next Story