நாலச்சோப்ராவில் கடத்தப்பட்ட சிறுமி குஜராத் ரெயில்நிலைய கழிவறையில் பிணமாக மீட்பு


நாலச்சோப்ராவில் கடத்தப்பட்ட சிறுமி குஜராத் ரெயில்நிலைய கழிவறையில் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 27 March 2018 1:19 AM GMT (Updated: 27 March 2018 1:21 AM GMT)

நாலச்சோப்ராவில் கடத்தப்பட்ட சிறுமி குஜராத் மாநிலம் நவ்சாரியில் உள்ள ரெயில்நிலைய கழிவறையில் பிணமாக மீட்கப்பட்டாள்.

வசாய்,

பால்கர் மாவட்டம், நாலச்சோப்ரா விஜய்நகரில் உள்ள சாய் அர்பன் குடியிருப்பை சேர்ந்த சிறுமி அஞ்சலி (வயது6). இவள் கடந்த சனிக்கிழமை மாலை குடியிருப்பு வாசல் அருகே விளையாடி கொண்டு இருந்தாள். திடீரென சிறுமி மாயமானாள். எங்கு தேடியும் அவளை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அஞ்சலியின் பெற்றோர் துலிஞ் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து குடியிருப்பு அருகே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது பெண் ஒருவர் சிறுமியை கடத்தி செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

போலீசார் சிறுமியை கடத்தி சென்ற பெண்ணின் வரை படத்தை எல்லா போலீஸ் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்தனர். மேலும் சிறுமியை பத்திரமாக மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் நவ்சாரி ரெயில்நிலைய பெண்கள் கழிவறையில் நேற்று முன்தினம் இரவு ஒரு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. விசாரணையில் அது நாலசோப்ராவில் கடத்தப்பட்ட சிறுமி அஞ்சலி என்பது தெரியவந்தது. குஜராத் போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிறுமியை கடத்தி சென்ற பெண் அவளை கொலை செய்து உடலை கழிவறையில் போட்டுவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. போலீசார் தலைமறைவு குற்றவாளியின் வரைபடத்தை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story