அரசின் இலவச பயிற்சி மையத்தில் சேர்ந்தவர்களில்20 சதவீத மாணவர்களே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்- அதிகாரி தகவல்
இலவச பயிற்சி மையங்களில் சேர்ந்தவர்களில் 20 சதவீத மாணவர்களே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் தமிழக அரசு நடத்தும் இலவச பயிற்சி மையங்களில் சேர்ந்தவர்களில் 20 சதவீத மாணவர்களே ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பிளஸ்-2 படித்தவர்கள் மருத்துவ படிப்பில் சேர ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கடினமாக இருக்கும் என்பதால் இதற்கு பயிற்சி அளிக்க ஏராளமான தனியார் கல்வி நிறுவனங்கள் வந்து உள்ளன. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் சேர பல ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏழை எளிய மாணவர்களிடம் பல ஆயிரம் ரூபாயை கட்டணமாக செலுத்த பொருளாதார வசதியில்லை என்பதால், தமிழக அரசு சார்பில் ‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி அளிக்க வட்டாரந்தோறும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டன. இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். தமிழகம் முழுவதும் பிளஸ்-2 மாணவர்கள் 72 ஆயிரம் பேர் அரசின் இலவச பயிற்சி மையங்களில் சேர்ந்து பயிற்சி பெற்றனர். இவர்களுக்கு வீடியோ கான்பரன்சிங் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது.
தற்போது பிளஸ்-2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருவதால் இலவச பயிற்சி வகுப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. பொதுத்தேர்வு முடிந்ததும் அடுத்த மாதம்(ஏப்ரல்) 6-ந்தேதி முதல் மீண்டும் பயிற்சி வகுப்புகள் தொடங்க உள்ளன. இதில் ஏற்கனவே பயிற்சி பெற்ற 72 ஆயிரம் பேரில், மே மாதம் 6-ந்தேதி நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அவர்களில் நன்றாக படிக்கும் 4 ஆயிரம் மாணவர்கள் மட்டும் பிரத்தியேக சிறப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். அந்த 4 ஆயிரம் பேரில் ஆங்கிலம் மொழி வழியில் படித்தவர்களுக்கு சென்னையிலும், தமிழ்மொழி வழியில் படித்தவர்களுக்கு திருச்சியிலும் இலவச உண்டு, உறைவிட வசதியுடன் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.
கடலூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் அரசின் சார்பில் 14 இடங்களில் நடைபெற்று வந்த இலவச பயிற்சி மையங்களில் 1,960 மாணவர்கள் பயிற்சி பெற்று வந்தனர். அவர்களில் 20 சதவீதம் பேர், அதாவது 396 பேர் மட்டுமே ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர் என்பதால், அவர்களுக்கு மட்டும் அதே பயிற்சி மையங்களில் ஏப்ரல் 6-ந்தேதி முதல் அடுத்த கட்ட பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அவர்களில் ஒரு சிலர் மட்டும் சிறப்பு பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
இது பற்றி கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நீட்’ தேர்வுக்கான அரசின் இலவச பயிற்சி மையங்களில் படிக்கும் மாணவர்கள் ஏழை, எளியவர்கள் என்பதால், அவர்களால் 1,500 ரூபாய் கட்டணம் செலுத்தி ‘நீட்’ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. இதனால் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கு நன்கொடையாளர்கள் மூலம் தேர்வு கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி இருந்தோம். அதனால் தான் ‘நீட்’ தேர்வுக்கு 20 சதவீத மாணவர்களாவது விண்ணப்பிக்க முடிந்தது என்றார்.
பொதுவாக தொழிற்கல்வி நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்ப கட்டணம் அதிகமாக உள்ளதால் ஏழை, எளிய மாணவர்களால் விண்ணப்பிக்க முடியவில்லை, இதனால் நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களின் டாக்டர், என்ஜினீயர் கனவு முளையிலேயே கருகி விடுகிறது.
எனவே ‘நீட்’ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு நடத்தினால் மட்டும் போதாது, அதில் சேரும் மாணவர்களுக்கு தேர்வுக்கான விண்ணப்ப கட்டணத்தையும் அரசே செலுத்த ஏற்பாடு செய்தால் தான் ஏழை, எளிய மாணவர்களால் ‘நீட்’ தேர்வில் கலந்து கொள்ளவாவது முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
Related Tags :
Next Story