தேனிக்கு வந்த ஸ்பெயின் நாட்டு தம்பதியிடம் கிரெடிட் கார்டுகள், பணம் திருட்டு


தேனிக்கு வந்த ஸ்பெயின் நாட்டு தம்பதியிடம் கிரெடிட் கார்டுகள், பணம் திருட்டு
x
தினத்தந்தி 29 March 2018 4:00 AM IST (Updated: 29 March 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

தேனியில் ஸ்பெயின் நாட்டு தம்பதியிடம் கிரெடிட் கார்டுகள், பணம் திருட்டு போனது. பணம் இல்லாததால் அவர்கள் திரும்பி செல்ல முடியாமல் தவித்தனர்.

தேனி,

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த எட்வர்டு (வயது 31) தனது மனைவி டயானா குயின்டனா (25) என்பவருடன் நேபாளம் மற்றும் இந்தியா பகுதிகளுக்கு சுற்றுலா வந்துள்ளார். இவர்கள் நேபாளம், கோவா, வாரணாசி, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா சென்றனர். பின்னர் கேரள மாநிலம் மூணாறில் இருந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக் கானலுக்கு செல்ல திட்டமிட்டனர்.

அதன்படி அவர்கள் நேற்று மூணாறில் இருந்து தேனிக்கு ஒரு அரசு பஸ்சில் வந்தனர். அவர்கள் தங்களின் உடைமைகளை ஒரு பேக்கில் வைத்து எடுத்து வந்தனர். பஸ் தேனி பஸ் நிலையம் வந்த போது, அவர்கள் கொண்டு வந்த பையை திறந்து பார்த்த போது, அதில் இருந்த கிரெடிட் கார்டுகள், ஓட்டுனர் உரிமம் மற்றும் பணம் மாயமாகி இருந்தது. உடனே அவர்கள் அக்கம் பக்கத்தில் விசாரித்து, தேனி போலீஸ் நிலையம் வந்தனர்.

போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகானந்தத்திடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். தாங்களின் 2 கிரெடிட் கார்டுகள், ரூ.8 ஆயிரம் இந்திய பணம் மற்றும் ஓட்டுனர் உரிமம் ஆகியவை திருட்டு போய்விட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.மேலும், தங்களிடம் மேற்கொண்டு பணம் இல்லை என்றும், கிரெடிட் கார்டு கிடைத்தால் தான் அதன் மூலம் பணம் பெற முடியும் என்றும் போலீசில் தெரிவித்தனர். ஆனால் அவர்களிடம் பாஸ்போர்ட் மற்றும் விசா பத்திரமாக இருந்தது. இதையடுத்து அவர்களுக்கு போலீசார் உணவு வாங்கி கொடுத்தனர்.

மேலும், இதுகுறித்து தேனி தாசில்தார் சத்தியபாமாவுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். அவர், இதுகுறித்து எட்வர்டு மற்றும் டயானா குயின்டனாவிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், ‘எங்களிடம் தற்போது பணம் இல்லை. ஸ்பெயினில் உள்ள நண்பர்கள் பணம் அனுப்புவதாக சொல்லி இருக்கிறார்கள். கொடைக்கானலில் ஒரு மாதம் தங்குவதற்கு ஓட்டலில் அறை முன்பதிவு செய்துள்ளோம். இன்று (நேற்று) ஒருநாள் தங்குவதற்கு இட வசதி செய்து கொடுங்கள்’ என்றனர்.

இதையடுத்து அவர்களை தேனியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தங்குவதற்கு தாசில்தார் நடவடிக்கை எடுத்தார். அவர்கள் இன்று (வியாழக்கிழமை) கொடைக்கானல் செல்ல உள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story