புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது


புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 April 2018 4:30 AM IST (Updated: 1 April 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டை அருகே புதுமாப்பிள்ளை கொலை வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகா அளேநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமப்பா. இவரது மகன் சோமசேகர் (வயது 27), வேன் டிரைவர். இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சாரதம்மா (21) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இந்த நிலையில் வீட்டில் மர்மமான முறையில் சோமசேகர் கடந்த 29-ந்தேதி இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பில் இறந்ததாக அவரது மனைவி சாரதம்மா உறவினர்களிடம் கூறினார். சோமசேகருக்கு கழுத்தில் காயம் இருந்ததால் உறவினர்கள் சந்தேகம் அடைந்து தேன்கனிக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் சோமசேகரின் உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் பிரேத பரிசோதனையில் சோமசேகர் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. விசாரணையில் சாரதம்மாவிற்கும், அதே பகுதியைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பேட்டராயன் (27) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததும், அதை சோமசேகர் தட்டிக் கேட்டதால் அவரை கள்ளக்காதலன், பேட்டராயனின் நண்பர் அப்பையா ஆகியோருடன் சேர்ந்து கழுத்தை இறுக்கி கொலை செய்து, மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக சாரதம்மா நாடகமாடியது தெரியவந்தது.

இதையடுத்து கொலையுண்ட சோமசேகரின் மனைவி சாரதம்மா, அவரது கள்ளக்காதலன் பேட்டராயன் மற்றும் கொலைக்கு உதவிய அளேநத்தம் கிராமத்தைச் சேர்ந்த அப்பையா என்கிற சந்திரன் (27) ஆகிய 3 பேரையும் தேன்கனிக்கோட்டை போலீசார் நேற்று கைது செய்தனர். பின்னர் அவர்கள் 3 பேரையும் தேன்கனிக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story