311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளம் அமைப்பு வேளாண்மை துறை இயக்குனர் தகவல்


311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளம் அமைப்பு வேளாண்மை துறை இயக்குனர் தகவல்
x
தினத்தந்தி 1 April 2018 4:00 AM IST (Updated: 1 April 2018 1:46 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் 311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளதாக வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார்.

கரூர்,

கரூரில் வேளாண்மை துறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி நேற்று ஆய்வு மேற்கொண்டார். வாங்கல், வாங்கல்குப்புச்சிபாளையம், நன்னியூர்புதூர், நடையனூர் ஆகிய பகுதிகளில் கூட்டுப்பண்ணைய குழு பணிகள், நீடித்த நிலையான வேளாண்மை திட்டப்பணிகள், கூட்டுப்பண்ணைய உற்பத்தியாளர் குழு பணிகள், நுண்ணீர் பாசன பணிகள், நிழல் வலைக்குடில் பணிகள் உள்ளிட்ட பணிகள் மேம்பாடுகளை அவர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது வாங்கலம்மன் திருமண மண்டப வளாகத்தில் கூட்டுப்பண்ணைய குழுக்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் விவசாய எந்திரங்களை வழங்கினார். வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியில் விவசாயி முத்துக்குமார் என்பவரது 1 ஏக்கர் நிலப்பரப்பில் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் கரும்பு சாகுபடி செய்யப்பட்டிருப்பதையும், நிழல் வலைக்குடில் திட்டத்தின் கீழ் கரும்பு நாற்று உற்பத்தி செய்வதையும் பார்வையிட்டு திட்டத்தின் பயன் குறித்து கேட்டறிந்தார்.

வேளாண் கருவிகள்

நன்னியூர்புதூர் கிராமத்தில் கந்தசாமி என்ற விவசாயி நிலத்தில் சூரிய சக்தி விளக்குப்பொறி அமைக்கப்பட்டிருந்ததை பார்வையிட்டார். நடையனூர் ஊராட்சியில் கூட்டுப்பண்ணைய உற்பத்தியாளர் குழுக்களுடன் கலந்துரையாடி வேளாண் உற்பத்தியாளர் குழுவினருக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான வேளாண் கருவிகளை வழங்கினர். இந்த ஆய்வின் போது வேளாண்மைதுறை இயக்குனர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:-

நடைபெற்று வரும் தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் தொடர்ந்து விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அரசு பல்வேறு தொழில்நுட்ப யுக்திகளையும், வேளாண் கருவிகள், இடுபொருட்களையும் வழங்கி வருகிறது.

விவசாய குழு

ஒருங்கிணைந்த விவசாயம் செய்தால் நல்ல லாபகரமான தொழிலாக விவசாயத்தை மேற்கொள்ள இயலும் என்ற அடிப்படையில் 20 நபர்கள் கொண்ட விவசாய ஆர்வலர் குழு அமைக்கப்பட்டு அதில் 5 குழுக்களை இணைத்து 100 நபர்களை கொண்ட விவசாய உற்பத்தியாளர் குழு அமைக்கப்படுகிறது. இவர்களுக்கு ரூ.5 லட்சம் மதிப்பில் ஆண்டிற்கு வேளாண் கருவிகள் வழங்கப்பட்டு விவசாயத்தை ஊக்குவித்து வருகின்றனர்.

இக்குழுக்களை 1,000 நபர்கள் கொண்ட குழுக்களாக இணைத்து விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் என்று அமைக்கப்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பில் வேளாண் கருவிகளும், இடுபொருட்களும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தை நிர்வகிப்பதற்காக முதன்மை செயல் அலுவலர் ஒருவர் மத்திய அரசின் மூலம் நியமிக்கப்பட்டு அரசே ஊதியம் வழங்குகிறது. இந்த நிறுவனத்தில் 7 முதல் 10 வரை குழுக்களை இணைத்து ஏற்றுமதி செய்யக்கூடிய மதிப்புக்கூட்டு விவசாய பொருட்களை உற்பத்தி செய்திடவும், ஏற்றுமதி செய்திடவும் அரசு நிதியுதவி வழங்குகிறது.

மழைநீர் சேகரிக்கும் தளம்

அரசின் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் திட்டங்களில் இது போன்ற குழுக்கள் மற்றும் நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயத்தை வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தண்ணீர் இல்லாத இச்சூழ்நிலையிலும் சொட்டுநீர் பாசனம் மிக நன்மை தரக்கூடிய ஒன்றாக உள்ளது. மேலும் சொட்டுநீர் பாசனம், தடுப்பணைகள், பண்ணைக்குட்டைகள், மழை நீர் சேகரிக்கும் இடங்கள் என இது தொடர்பான திட்டங்கள் மாநிலம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் 311 இடங்களில் மழைநீர் சேகரிக்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பண்ணைக்குட்டைகள் அமைப்பதற்கும், தடுப்பணைகள் அமைப்பதற்கும் தகுந்த இடங்களை தேர்வு செய்ய விவசாயிகளிடமிருந்து ஆலோசனை கேட்கப்படும்.

கூட்டுறவு கடன்

தமிழகத்தில் 2016-17ம் ஆண்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் வாயிலாக ரூ.4 ஆயிரத்து 22 கோடியே 98 லட்சம் மதிப்பில் 7 லட்சத்து 62 ஆயிரத்து 772 பயனாளிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் அன்பழகன், வேளாண்மை துறை இணை இயக்குனர் பாஸ்கரன், உதவி கலெக்டர் சரவணமூர்த்தி, உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர்கள் சுப்பிரமணியன் (நடையனூர்), கனகராஜ் (வாங்கல்) உள்பட பலர் உடனிருந்தனர். 

Next Story