பானிபூரி கடன் கொடுக்காததால் தகராறு: வியாபாரியின் தந்தைக்கு கொலை மிரட்டல் வாலிபர் கைது


பானிபூரி கடன் கொடுக்காததால் தகராறு: வியாபாரியின் தந்தைக்கு கொலை மிரட்டல் வாலிபர் கைது
x
தினத்தந்தி 2 April 2018 2:45 AM IST (Updated: 2 April 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஊஞ்சலூர் அருகே வியாபாரியின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஊஞ்சலூர்,

ஊஞ்சலூர் அருகே உள்ள மலையம்பாளையம் நத்தமேடுவை சேர்ந்தவர் செந்தில்குமார். அவருடைய மகன் லோகநாதன். இவர் கருமாண்டாம்பாளையத்தில் பேக்கரி மற்றும் பானிபூரி கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மலையம்பாளையம் நத்தமேடுவில் வசிக்கும் முருகேசனின் மகன் வினோத்குமார் (25) என்பவர் நேற்று முன்தினம் சென்று கடனுக்கு பானிபூரி கேட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், லோகநாதனின் வீட்டுக்கு அரிவாளுடன் சென்றுள்ளார். அங்கிருந்த அவரது தந்தை செந்தில்குமாரிடம், ‘உனது மகன் எனக்கு கடனுக்கு பானிபூரி கொடுக்க மறுத்துவிட்டான். அவன் எப்படி கடை வைத்து நடத்துகிறான் என்று நானும் பார்த்துவிடுகிறேன்’ என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் தகாத வார்த்தையால் பேசி செந்தில்குமாருக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.

இதுகுறித்து செந்தில்குமார் மலையம்பாளையம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்தனர்.


Next Story