தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் சாவு
தேவகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலியானார்.
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள மருதவயல் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி. இவருடைய மகன் பிரேம்குமார்(வயது 23). இவர் காரைக்குடியில் உள்ள தனியார் கெமிக்கல் ஆலையில் பணியாற்றி வந்தார். நேற்று காலை வேலை தொடர்பாக பிரேம்குமார் காரைக்குடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தார். புளியால் அருகே பருத்தியூர் கண்மாய் அருகில் அவர் சென்றபோது, பருத்தியூரை சங்கையா(50) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சங்கையா மீது மோதி சாலையோரத்தில் கவிழ்ந்தது. இதில் பிரேம்குமார் மற்றும் சங்கையா பலத்த காயமடைந்தனர். இதில் பிரேம்குமார் சம்பவ இடத்திலேயே இறந்துபோனார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேவகோட்டை தாலுகா போலீசார் சங்கையாவை மீட்டு சிகிச்சைக்காகவும், பிரேம்குமார் உடலை பிரேத பரிசோதனைக்காகவும் தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் இதுதொடர்பாக போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், முத்துராமன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.