மேல்மலையனூர் அருகே பா.ம.க.–தி.மு.க.வினரிடையே மோதல்; முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 13 பேர் மீது வழக்கு 4 பேர் கைது
மேல்மலையனூர் அருகே பா.ம.க.–தி.மு.க.வினரிடையே மோதலில் முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 13 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது மற்றும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேல்மலையனூர்,
மேல்மலையனூர் அருகே உள்ள மேட்டு வயலாமூர் கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பா.ம.க. கொடியேற்று விழா நடந்தது. விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் கலந்து கொண்டு கட்சி கொடியை ஏற்றி வைத்தார். அப்போது அங்கு வந்த பொதுமக்கள் தங்களது கிராமத்தில் குடிநீர் பிரச்சினை உள்ளதாகவும், அதனை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் கணேஷ்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர். இதைகேட்ட பா.ம.க.வினர் சிலர் தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் இவ்வளவு நாளாக என்ன செய்து கொண்டிருந்தார் என கூறியதாக தெரிகிறது.
இதுபற்றி தகவல் அறிந்த சம்பத் உள்ளிட்ட தி.மு.க.வினர் கொடியேற்று விழா நடந்த இடத்துக்கு விரைந்து வந்து, பா.ம.க.வினரை தட்டிக்கேட்டனர். இதனால் பா.ம.க.வினருக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இருகட்சியினரும் ஒருவரையொருவர் திட்டி, தாக்கி கொண்டனர்.
இதுபற்றி இருகட்சி நிர்வாகிகள் கொடுத்த புகார்களின்பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. கணேஷ்குமார் உள்ளிட்ட இருகட்சிகளை சேர்ந்த 13 பேர் மீது அவலூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சம்பத் மற்றும் பா.ம.க.வை சேர்ந்த மணிகண்டன், தமிழரசன், சுரேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.