கூட்டுறவு சங்க 2-வது கட்ட தேர்தல்: 179 சங்கங்களில் 4,104 பேர் மனுத்தாக்கல்


கூட்டுறவு சங்க 2-வது கட்ட தேர்தல்: 179 சங்கங்களில் 4,104 பேர் மனுத்தாக்கல்
x
தினத்தந்தி 2 April 2018 3:45 AM IST (Updated: 2 April 2018 3:21 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்க 2-வது கட்ட தேர்தலில் போட்டியிட 179 சங்கங்களில் 4,104 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

வேலூர்,

தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்க தேர்தல் 4 நிலைகளில் நடைபெறுகிறது. வேலூர் மாவட்டத்தில் 675 கூட்டுறவு சங்கங்களில் உள்ள 6,973 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 26-ந் தேதி நடைபெற்றது. ராணிப்பேட்டை கோட்டத்தில் 28 கூட்டுறவு சங்கங்கள், வேலூரில் 28 சங்கங்கள், திருப்பத்தூரில் 25 சங்கங்கள் உள்ளன.

இந்த சங்கங்களுக்கான மனுத் தாக்கல் 26-ந் தேதி நடந்தது. அதில் ராணிப்பேட்டை கோட்டத்தில் உள்ள 28 சங்கங்களில் 1,041 பேரும், வேலூரில் உள்ள 28 சங்கங்களில் 540 பேரும், திருப்பத்தூரில் உள்ள சங்கங்களில் 1,023 பேரும் என மொத்தம் 2,604 பேர் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

162 சங்கங்களுக்கு போட்டியின்றி தேர்வு

அதேபோன்று மீன்வள கூட்டுறவு சங்கம், கைத்தறி மற்றும் துணிநூல் கூட்டுறவு சங்கம், 3 வேளாண்மைத்துறை சங்கங்கள், கதர் கிராமத்தொழில் கூட்டுறவு சங்கம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட சங்கம், பால் கூட்டுறவு சங்கம் என மொத்தம் 186 சங்கங்களில் 4 ஆயிரம் பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களில் ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் கோட்டத்தில் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 62 சங்கங்களுக்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். 17 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. 2 சங்கங்களுக்கு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை.

அதேபோன்று செயற்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 105 சங்கங்களில் 100 சங்கங்களுக்கு போட்டியின்றி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளார்கள். 5 சங்கங்களுக்கு தேர்தல் நடைபெற இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

4,104 பேர் மனுத்தாக்கல்

இந்த நிலையில் நேற்று முன்தினம் 2-வது கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 76 சங்கங்களுக்கு 2,719 பேர், செயற்பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள 103 சங்கங்களுக்கு 1,385 பேர் என மொத்தம் 179 சங்கங்களுக்கு 4,104 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. 7-ந் தேதி (சனிக்கிழமை) தேர்தல் நடைபெறுகிறது. 3-வது கட்ட தேர்தலுக்கான மனுதாக்கல் வருகிற 9-ந் தேதியும், 4-வது கட்ட தேர்தலுக்கான மனுத்தாக்கல் 16-ந் தேதியும் நடக்கிறது. 

Next Story