காவிரி பிரச்சினையில் ‘காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இரட்டை வேடம் போடுகின்றன’ - எச்.ராஜா குற்றச்சாட்டு


காவிரி பிரச்சினையில் ‘காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இரட்டை வேடம் போடுகின்றன’ - எச்.ராஜா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 3 April 2018 4:15 AM IST (Updated: 3 April 2018 1:10 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான பிரச்சினையில் காங்கிரசும், கம்யூனிஸ்டுகளும் இரட்டை வேடம் போடுகின்றன என்று எச்.ராஜா கூறினார்.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி சுந்தரம்நகரில் பா.ஜனதா கட்சியின் 4 ஆண்டு சாதனை விளக்கக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட துணைத்தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். நகர தலைவர் வசீகரன் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் சாமிநாதன், மாவட்ட முன்னாள் துணைத்தலைவர் ரங்கசாமி, ஒன்றிய தலைவர்கள் ராஜலிங்கம்(சிங்கம்புணரி), சங்கர்(எஸ்.புதூர்) ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த கூட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும் பிற கட்சிகளை சேர்ந்த 50 பேர் எச்.ராஜா முன்னிலையில் பா.ஜனதாவில் இணைந்தனர்.

முன்னதாக சேவுகமூர்த்தி மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் எச்.ராஜா கூறியதாவது:-

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு எதிர்க்கவில்லை. வாரியம் அமைக்க வேண்டும் என்பதைவிட காவிரி தண்ணீரே தமிழகத்திற்கு வேண்டும். காவிரி வாரியம் அமைக்கவும், காவிரி தண்ணீரை தமிழகத்திற்கு கொண்டுவரவும் மோடி அரசால் மட்டுமே முடியும். தமிழகம் சீர்கெட காரணம் தி.மு.க.வும், கருணாநிதி குடும்பம் தான். கருணாநிதி குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளில் ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று மாணவர்களை கட்டாயப்படுத்துகின்றனர். இவர்களா தமிழை வளர்க்கிறார்கள்.

அண்டை மாநிலமான கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சிகள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கிறது. தமிழகத்தில் உள்ள கம்யூனிஸ்டு ஆதரவு தெரிவிக்கிறது. கர்நாடகாவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க காங்கிரஸ் எதிர்க்கிறது. தமிழகத்தில் ஆதரவு அளிக்கிறது. அண்டை மாநிலத்திலேயே கம்யூனிஸ்டுகளும், காங்கிரசும் இரட்டை வேடம் போடுகின்றனர். பூனை மேல் மதில் என்ற கணக்கில் பேசி வருகின்றனர். பூனை மேல் மதில் என்றால் பூனை செத்து விடும். ம.தி.மு.க. தலைவர் வைகோ ஸ்டெர்லைட் குறித்து அதிகமாக புகார் கூறி மேடைகளில் முழங்கியவர், தற்போது அவர்களது கவனிப்பால் ஸ்டெர்லைட் குறித்து பேசுவதை நிறுத்திவிட்டு நியூட்ரினோ திட்டத்தை எதிர்ப்பதாக கூறி நடைபயணத்தை மேற்கொள்கிறார். மக்களை பாதிக்கின்ற எந்த செயலையும் மத்திய அரசு செய்யாது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story