தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டால் மு.க.ஸ்டாலின் தான் காரணம் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி
தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு கெட்டால் மு.க.ஸ்டாலின் தான் காரணம் என்று பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் மாவட்ட பாரதீய ஜனதா கட்சி சார்பில், மகாசக்தி கேந்திரம் மற்றும் சக்தி கேந்திரம் பொறுப்பாளர்கள் கூட்டம் செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை திருவண்ணாமலைக்கு வந்தார். பின்னர் அவர், அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து அவர், கூட்டத்தில் கலந்துகொண்டார். இதில் மாநில விவசாய அணி செயலாளர் ஏ.ஜி.காந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான அரசியல் வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை. எது நடந்தாலும் மக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் ஒரு தொலை நோக்கு பார்வையுடன் இருக்க வேண்டும். அதை நோக்கி தான் மத்திய அரசும், தமிழக பாரதீய ஜனதா கட்சியும் பயணிக்கிறது.
எந்த விதத்திலும் நாங்கள் தமிழக மக்களின் உரிமையை பெற்று தருவதில் சிறிய அளவு கூட பின்வாங்க மாட்டோம். நாட்டில் தீர்க்க முடியாத பிரச்சினைகளை பா.ஜ.க.வால் மட்டுமே தீர்க்க முடியும்.
காவிரி பிரச்சினையை மு.க.ஸ்டாலின் உள்பட எல்லோரும் மிகப்பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொண்டு உள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தற்போது உச்சநீதிமன்றம் தற்போது தெளிவுப்படுத்தி உள்ளது. அதில், “நாங்கள் வழிகாட்டு குழு தான் சொன்னோம், காவிரி மேலாண்மை வாரியம் என்று சொல்லவில்லை” என்று கூறியுள்ளது. இதன் மூலம் தற்போது ஒரு தெளிவு கிடைத்து உள்ளது. குழு என்றால் ஒட்டுமொத்தமாக தண்ணீர் கிடைக்க வேண்டிய தீர்வு.
மேலாண்மை வாரியம் என்றால் அணைகளுக்கு உள்ள அத்தனை உரிமையும், அனைத்து மாநில அரசும் அந்த வாரியத்திற்கு விட்டு கொடுக்க வேண்டும். மத்திய அரசு ஏற்கனவே இதற்காக ஒரு கூட்டம் நடத்தி அதில் உள்ள ஒரு தெளிவை கேட்டு இருப்பதினால், இது நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்குள் வருமா? என்பது சந்தேகம் தான். ஏனென்றால் சட்ட விதிகளுக்கு உட்பட்டு தான் மத்திய அரசு நடந்து கொண்டு இருக்கிறது.
நாங்கள் எப்படியும் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைப்பதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம். சட்ட விதிகளுக்கு உட்பட்டு சட்ட ரீதியாக இப்படிப்பட்ட தீர்வை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கும் போது, பொது மக்களுக்கு இடையூறாக ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் தங்கள் சுய நலத்திற்காகவும், தங்கள் கட்சி பெயர் எடுப்பதற்காகவும் இப்படி செய்வது சரி அல்ல. இதற்கு எல்லாம் மு.க.ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும்.
1974-ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தில் இருந்த காவிரி தொடர்பான வழக்கை தி.மு.க. வாபஸ் வாங்கியது. அப்படி இருக்கும் போது நீங்கள் போராடுகின்றீர்கள் என்றால், உங்களுக்கு எதிராக நீங்களே போராடுகின்றீர்களா? 10 வருடம் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது காவிரி பிரச்சினை இருந்தது. அப்போது தி.மு.க. அழுத்தத்தை கொடுத்து இருந்தால் காவிரி பிரச்சினை தீர்ந்து இருக்கும்.
காவிரி பிரச்சினையை முழுவதுமாக பா.ஜ.க. மீது சுமத்தினால், இந்த பிரச்சினைக்கு முழு முதற்காரணம் தி.மு.க. என்பதையும், அதற்கு துணை நின்றது காங்கிரஸ் என்பதையும் மக்களுக்கு தெளிவு படுத்துவோம்.
காவிரியில் முழுமையாக தீர்வு கிடைக்கும் வரை நான் சிறையிலேயே இருப்பேன் என்று மு.க.ஸ்டாலினை கைது ஆக சொல்லுங்கள். இன்று (அதாவது நேற்று) அ.தி.மு.க. எம்.பி. ஒருவர் ராஜினாமா செய்து உள்ளார். கனிமொழி ஏன் திருநெல்வேலியில் போய் கைது ஆகிறார். கையில் இருக்கும் பதவியை ராஜினாமா செய்ய சொல்லுங்கள். அவர்கள் செய்வது எல்லாம் நாடகம். உணர்வு பூர்வமாக தான் போராடுகிறோம் என்றால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
தற்போது உச்சநீதிமன்றம் ‘ஸ்கீம்’ தான் நாங்கள் சொன்னோம் என்று கூறியுள்ளது. அதனால் மக்கள் மத்தியில் பிரச்சினையை ஏற்படுத்தியதற்காக நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்.
வருகிற 9-ந் தேதி தமிழக அரசின் வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாக இருக்க முடியாது. நீதிமன்ற விதிகளுக்கு உட்பட்டு தான் மத்திய அரசு நடந்து கொண்டு உள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டால் அதற்கு மு.க.ஸ்டாலின் தான் காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story