மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்


மத்திய அரசை கண்டித்து ஜெயங்கொண்டத்தில் அரசியல் கட்சியினர் சாலை மறியல்
x
தினத்தந்தி 3 April 2018 10:45 PM GMT (Updated: 3 April 2018 7:51 PM GMT)

மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர், ஜெயங்கொண்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் 290 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஜெயங்கொண்டம்,

காவிரி நீர் பங்கீடு தொடர்பாக நடுவர் மன்றம் வழங்கிய இறுதி தீர்ப்பினை நடை முறைப்படுத்த ‘ஸ்கீம்’ (செயல்திட்டம்) ஒன்றை 6 வாரங் களுக்குள் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அந்த வகையில், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவற்றை அமைக்குமாறு காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருந்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் அந்த இரு அமைப்புகளையும் அமைக்க வேண்டும் என தமிழக அரசும், அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்தனர். எனினும் கோர்ட்டு விதித்த அந்த காலக்கெடுவிற்குள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்திவிட்டு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காதது தமிழக அரசியல் கட்சியினர், விவசாயிகளிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில், பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமையில் தி.மு.க.வினர் மற்றும் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பெரம்பலூர் காமராஜர் வளைவு சிக்னல் பகுதியில் திரண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசினை கண்டித்து நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை பறிக்கும் விதமாக மத்திய அரசு துரோகம் இழைத்து விட்டது. இந்த விவகாரத்தில் மாநில அரசும் அழுத்தம் கொடுக்காமல் இருந்தது ஏமாற்றம் அளிக் கிறது. கோர்ட்டு கெடுமுடிந்ததும் ‘ஸ்கீம்’ என்றால் என்ன? என பல்வேறு கேள்விகளை எழுப்பி மத்திய அரசு மனுதாக்கல் செய்திருப்பதும், மாநில அரசு சட்ட நிபுணர் களுடன் ஆலோசனை செய்துவிட்டு உண்ணாவிரதம் இருப்பதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான விவகாரத்தில் தமிழகம் புறக் கணிக்கப்பட்டதை காட்டு கிறது. எனவே காவிரி டெல்டா பாசன விவசாயிகளின் நலன் கருதி தமிழகத்திற்கான காவிரிநீரை பெற்றுத்தர மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.

மறியலில் ஈடுபட்டதாக தி.மு.க மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முகுந்தன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார், நகர செயலாளர் பிரபாகரன் மற்றும் ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் துரைராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் தமிழ்மாணிக்கம், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் ஞானசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்லதுரை மற்றும் விவசாய சங்க பிரதி நிதிகள் ரமேஷ், ராஜேந்திரன் உள்பட 160 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 10 பேர் பெண்கள் ஆவர். அவர்கள் பெரம்பலூரிலுள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த மறியல் போராட்டத்தில் அரசியல் கட்சியினர் பலரும் பச்சை துண்டினை கழுத்தில் அணிந்தபடியே விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதேபோல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய-மாநில அரசுகளை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் மாநில இளைஞரணி இணை செயலாளர் சுபாசந்திரசேகர், ஜெயங்கொண்டம் நகர செயலாளர் கருணாநிதி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட தி.மு.க. மாவட்ட செயலாளர் உள்பட 130 பேரை போலீசார் கைது செய்து அப்பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரையும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story