பா.ஜனதா எம்.எல்.சி. சோமண்ணா எனக்கூறி பொதுமக்களிடம் நகைகள், பணம் மோசடி செய்தவர் கைது
பா.ஜனதா எம்.எல்.சி.யான சோமண்ணா எனக்கூறி பொதுமக்களிடம் நகைகள் மற்றும் பணத்தை மோசடி செய்தவரை பெங்களூரு போலீசார் கைது செய்தனர். இவர் மைசூருவை சேர்ந்தவர் ஆவார்.
பெங்களூரு
கர்நாடக மேல்–சபை உறுப்பினராக(எம்.எல்.சி.) இருப்பவர் சோமண்ணா. பா.ஜனதா கட்சியை சேர்ந்தவர். இந்த நிலையில், எம்.எல்.சி.யான சோமண்ணாவின் பெயரில் நகைகள், பணம் ஆகியவற்றை மோசடி செய்த மர்மநபரை பசவேஸ்வரா நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் மைசூரு என்.வி.பி. நகரை சேர்ந்த எல்.சோமண்ணா(வயது 39) என்பதும், அவர் பெங்களூரு சககாரா நகரில் தங்கி மோசடியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.இவர் மீது பெங்களூரு வயாலிகாவல், கொடிகேஹள்ளி, மைசூரு டவுன் நஜர்பாத் ஆகிய போலீஸ் நிலையங்களில் தங்க நகைகள், பணம் ஆகியவற்றை மோசடி செய்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளதும் தெரியவந்தது.
அதாவது கைதான எல்.சோமண்ணா, பெங்களூருவில் உள்ள நகை கடைகளுக்கு சென்று, தான் பா.ஜனதா கட்சியில் எம்.எல்.சி. பதவியில் உள்ளேன். என் பெயர் சோமண்ணா. வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா சார்பில் வேட்பாளராக போட்டியிட உள்ளேன். சித்ரதுர்கா மாவட்டம் முலகால்மூரு, செல்லக்கெரே, சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் அல்லது மைசூரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறியுள்ளார். மேலும், சட்டசபை தேர்தலையொட்டி ஏழை ஜோடிகளுக்கு கூட்டு திருமணம் செய்ய முடிவு செய்து உள்ளேன் எனக்கூறும் அவர், நகை வியாபாரிகளிடம் தங்க நகைகள், தங்க கட்டிகளை வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்து உள்ளார்.இதேபோல், வங்கிகளில் கடன் பெற்று கொடுப்பதாகவும், அரசிடம் இருந்து நிலம் பெற்று தருவதாகவும், அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி அவர் பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. மேலும், விசாரணை நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story