காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 52 பேர் கைது


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 52 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2018 4:15 AM IST (Updated: 5 April 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கும்பகோணத்தில் தபால் நிலையத்துக்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

கும்பகோணம்,

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கும்பகோணம் தலைமை தபால் நிலையம் முன் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் அசோக் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி செயலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தார். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கும்பகோணம் மகாமக குளக்கரையில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கும்பகோணம் தலைமை தபால் நிலையத்தை அடைந்தனர். அப்போது அவர்கள் திடீரென போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை தாண்டி தபால் நிலையத்துக்குள் புகுந்து அலுவலகத்தின் உள்ளே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய- மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர். தபால் நிலையத்துக்குள் சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்த ஆர்ப்பாட்டத்தால் தபால் நிலைய ஊழியர்களும் அங்கு வந்த பொதுமக்களும் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

கைது

இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் நாம் தமிழர் கட்சியினரை வெளியே வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுமாறு கூறினர். ஆனால் போலீசாரின் வேண்டுகோளை ஏற்காத அவர்கள் தொடர்ந்து தபால் நிலையத்துக்குள் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. எனவே போலீசார் தபால் நிலையத்துக்குள் புகுந்து நாம் தமிழர் கட்சியினரை குண்டுக்கட்டாக வெளியேற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பெண்கள் உள்பட 52 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story