மும்பை மாநகராட்சியில், முதன் முறையாக ரூ.5,150 கோடி சொத்து வரி வசூல்


மும்பை மாநகராட்சியில், முதன் முறையாக ரூ.5,150 கோடி சொத்து வரி வசூல்
x
தினத்தந்தி 5 April 2018 5:42 AM IST (Updated: 5 April 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் முதல் முறையாக மாநகராட்சி ரூ.5 ஆயிரத்து 150 கோடி சொத்து வரி வசூல் செய்து உள்ளது.

மும்பை,

நாட்டின் பணக்கார மாநகராட்சியான மும்பை மாநகராட்சிக்கு ஆக்ட்ராய் வரி மூலம் அதிகளவு வருமானம் கிடைத்து வந்தது. ஜி.எஸ்.டி. காரணமாக அந்த வரி ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை மாநில அரசு தரும் இழப்பீடு மூலம் ஈடுசெய்யப்படுகிறது.

2-வது அதிகபட்ச வருமானம் சொத்து வரி மூலம் மாநகராட்சிக்கு கிடைத்து வருகிறது. ஆக்ட்ராய் வரி ஒழிப்பிற்கு பிறகு மாநகராட்சி சொத்து வரி வசூலில் தீவிரம் காட்டி வருகிறது. இதன் காரணமாக ஒரே ஆண்டில் (2017-18) மும்பை மாநகராட்சிக்கு சொத்து வரி மூலம் ரூ.5 ஆயிரத்து 150 கோடி வருமானம் கிடைத்து உள்ளது.

இது கடந்த 2016-17-ம் ஆண்டில் வசூலான தொகையை விட ரூ.300 கோடி அதிகமாகும். ஒரு வருடத்தில் சொத்து வரி மூலம் அதிகபட்ச தொகை வசூலாகியிருப்பது இது தான் முதல் முறை என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து மாநகராட்சி உதவி கமிஷனர் தேவிதாஸ் சிர்காசர் கூறுகையில், கடந்த நிதியாண்டில் சொத்து வரி செலுத்தாத 200 சொத்துகளுக்கு ‘சீல்’ வைத்து நடவடிக்கை எடுத்து உள்ளோம். இந்த நடவடிக்கையே அதிகளவில் சொத்து வரி வசூலானதற்கு முக்கிய காரணம். சொத்து வரி வசூலிப்பதற்காக வருட இலக்கு ரூ.5 ஆயிரத்து 200 கோடி ஆகும். எனவே ரூ.50 கோடி வசூலாக வேண்டி இருக்கிறது. இதுதவிர கோர்ட்டு வழக்கு உள்ளிட்ட காரணங்களால் மாநகராட்சிக்கு ரூ.5 ஆயிரம் கோடி வரை சொத்து வரி பாக்கி வசூலிக்கப்படாமல் உள்ளது’ என்றார்.

Next Story