கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடியில் தி.மு.க.வினர் மறியல்–550 பேர் கைது


கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடியில் தி.மு.க.வினர் மறியல்–550 பேர் கைது
x
தினத்தந்தி 5 April 2018 10:45 PM GMT (Updated: 5 April 2018 9:57 PM GMT)

கொண்டலாம்பட்டி, மகுடஞ்சாவடியில் தி.மு.க.வினர் மறியலில் ஈடுபட்டனர். மொத்தம் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,


சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கொண்டலாம்பட்டியில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதற்கு கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் வீரபாண்டி ராஜா தலைமை தாங்கினார். இதில் ஒன்றிய செயலாளர்கள் சுரேஷ்குமார், வெண்ணிலா சேகர், மாணிக்கம், முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி, இளைஞர் அணி துணை செயலாளர் சங்கர் மற்றும் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 8 பெண்கள் உள்பட 150 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் மறியல் போராட்டத்தில் பிரதமர் மோடியின் உருவபொம்மையை தி.மு.க.வினர் தீ வைத்து எரித்தனர். இதைப்பார்த்த போலீசார் அதன் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

மகுடஞ்சாவடி


சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நேற்று காலை மகுடஞ்சாவடி ரெயில் நிலையத்தில் மறியல் போராட்டம் நடந்தது. இதற்கு தி.மு.க. மாநில விவசாய அணி தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமை தாங்கினார். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட துணைச்செயலாளர் சம்பத், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, பார்த்தீபன், மகுடஞ்சாவடி ஒன்றிய பொறுப்பாளர் பச்சமுத்து, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ஏ.ஏ.ஆறுமுகம், மாவட்ட இளைஞர் அணி துணைக் அமைப்பாளர் மகேந்திரன், மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் கண்ணன், மற்றும் காக்கா பாளையம் சரவணன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஜோலார்பேட்டை– ஈரோடு பாசஞ்சர் ரெயிலை மறித்து மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து போலீசார் ரெயில் மறியலில் ஈடுபட்ட 200 பேரை கைது செய்தனர்.


Next Story