நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம் - எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,391 பேர் கைது


நெல்லை மாவட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சிகள் மறியல் போராட்டம் - எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,391 பேர் கைது
x
தினத்தந்தி 6 April 2018 12:17 AM GMT (Updated: 6 April 2018 12:17 AM GMT)

எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,391 பேர் கைது செய்யப்பட்டனர், பெரும்பாலான கடைகள் அடைப்பட்டிருந்தன, பஸ்கள் வழக்கம் போல் ஓடின.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் நேற்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த முழு அடைப்பு போராட்டத்தையொட்டி பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ்கள் வழக்கம் போல் ஓடின. ரெயில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் உள்பட 2,391 பேரை போலீசார் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், இதற்கு காலம் தாழ்த்தி வரும் மத்திய அரசை கண்டித்தும் தி.மு.க. கூட்டணி கட்சிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் நேற்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

இதையொட்டி நேற்று நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நெல்லை டவுனில் ரதவீதிகள் மற்றும் கடை வீதிகள், பாளையங்கோட்டை பகுதியில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. 60 சதவீதத்துக்கும் அதிகமான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. நகைக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலப்பாளையத்தில் அண்ணா வீதி, மேலநத்தம் ரோடு, வி.எஸ்.டி. பள்ளிவாசல் முக்கு உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நெல்லை டவுன் நேதாஜி போஸ் மார்க்கெட் வழக்கம் போல் திறந்து, வியாபாரம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் நேற்று போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பஸ்கள், கார், வேன், ஆட்டோக்கள், லாரிகள் வழக்கம் போல் ஓடின. ஆனால் பஸ்களில் வழக்கத்தைவிட பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

முழு அடைப்பையொட்டி நெல்லை மாவட்டத்தில் ஆங்காங்கே ரெயில் மறியல் மற்றும் சாலை மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. நெல்லை சந்திப்பு அருகில் உள்ள குருந்துடையார்புரத்தில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே ரெயில்வே பாலம் உள்ளது. இந்த பகுதியில் நேற்று காலையில் டி.பி.எம்.மைதீன்கான் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. மாலை ராஜா ஆகியோர் தலைமையில் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டனர். அவர்கள் ரெயில்வே பாலத்தின் மீது ஏறி அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு பாசஞ்சர் ரெயில் அந்த வழியாக வந்தது. அந்த ரெயில் முன்பு தண்டவாளத்தில் பேனரை கட்டி வைத்து மறித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்றனர். ரெயில்வே பாலத்தின் மீது ஏறி தண்டவாளத்தில் அமர்ந்திருந்த தி.மு.க.வினரை அங்கிருந்து அப்புறப்படுத்தி கைது செய்தனர். இதில் 47 பெண்கள் உள்பட 111 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தின்போது தொண்டர் ஒருவர் பையில் மண்எண்ணெய் கேன் வைத்திருந்தார். அவர் தண்டவாளத்தின் நடுவே தீக்குளிக்க தயார் நிலையில் இருந்ததும் தெரியவந்தது. இதை அறிந்த போலீசார் அந்த நபரிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதுதவிர காலை 10.30 மணிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ஆவுடையப்பன், மாநகர மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப், லட்சுமணன் எம்.எல்.ஏ. தலைமையில் தி.மு.க. கூட்டணி கட்சியினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு திரண்டு வந்தனர்.

இந்த போராட்டத்துக்கு கொக்கிரகுளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இருந்து நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் முன்னாள் எம்.பி. ராமசுப்பு, மண்டல தலைவர் தனசிங் பாண்டியன், ராஜேஸ் முருகன், ஸ்டாலின் உள்ளிட்டோர் கொடிகளை கையில் ஏந்தி, ஊர்வலமாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்தனர். முன்னதாக அவர்கள் கட்சி அலுவலகம் எதிரே உள்ள தனியார் மார்க்கெட்டை முற்றுகையிட்டு, அதனை அடைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.

இதேபோல் மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன், ம.தி.மு.க. மாநகர மாவட்ட செயலாளர் நிஜாம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் காசிவிசுவநாதன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் மீரான் மைதீன் மற்றும் பல்வேறு அமைப்பினர் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு திரண்டனர்.

பின்னர் அவர்கள் ரெயிலை மறிப்பதற்காக ரெயில் நிலையத்துக்குள் நுழைய முயற்சி செய்தனர். இதையொட்டி போலீசார் இரும்பு தடுப்புகளை வைத்து யாரும் நுழையமுடியாதபடி தடுத்திருந்தனர். அந்த தடுப்புகளை போராட்டக்காரர்கள் அகற்றி, தாண்டி உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கு மூடி வைத்திருந்த இரும்பு கேட்டை திறந்து முதலாவது பிளாட்பாரத்துக்குள் சென்றனர்.

அப்போது 3-வது பிளாட்பாரத்தில் ஒரு என்ஜின் மட்டும் ஓடிக்கொண்டிருந்தது. இதைக்கண்ட அவர்கள் 3-வது பிளாட்பாரத்துக்கு ஓடிச்சென்று, அதனை மேலும் செல்ல விடாமல் தடுத்து நிறுத்தி அதன் மீது ஏறி நின்று கோஷங்களை எழுப்பினர். பின்னர் அவர்கள் மீண்டும் முதலாவது பிளாட்பாரத்தில் வந்து காத்திருந்தனர். போலீசார் அவர்களை வெளியே செல்லுமாறு கூறியும் போக மறுத்து விட்டனர்.

இதற்கிடையே 11.30 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் பாசஞ்சர் ரெயில் சந்திப்பு ரெயில் நிலையத்தில் முதலாவது பிளாட்பாரத்துக்கு வந்தது. இதைக்கண்ட அவர்கள் முதலாவது பிளாட்பாரத்தில் இருந்து தண்டவாளத்துக்கு இறங்கி ரெயிலை நோக்கி ஓடினார்கள். இதைக்கண்ட ரெயில் டிரைவர் புதிய நுழைவுவாசல் அருகே ரெயிலை நிறுத்தினர். இதையடுத்து அந்த ரெயில் என்ஜின் மீது ஆவுடையப்பன், அப்துல் வகாப், காங்கிரஸ் சங்கரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் சிலர் ஏறி நின்றனர். அவர்கள் மத்திய அரசை கண்டித்தும், மோடியை கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் கோஷங்களை எழுப்பினர்.

அப்போது சிலர் கொடிகளை ரெயில் என்ஜினுக்கு மேலே உள்ள மின்கம்பி அருகில் கொண்டு சென்றனர். இதையடுத்து போலீசார் ஒலிபெருக்கி மூலம், உயர் அழுத்த மின் கம்பி அருகில் யாரும் செல்ல வேண்டாம், கொடிகளை தூக்கி பிடிக்க கூடாது என்று எச்சரிக்கையும், வேண்டுகோளும் விடுத்தனர்.

20 நிமிடங்கள் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் அவர்கள் ரெயில் என்ஜினில் இருந்து கீழே இறங்கி வந்தனர். மேலும் தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்களும் வெளியே வந்து போராட்டத்தை கைவிட்டனர். போலீசார் அவர்களை ரெயில் நிலையத்துக்கு வெளியே அழைத்து வந்து கைது செய்தனர். இதில் 10 பெண்கள் உள்பட 292 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதற்கிடையே நெல்லை சந்திப்பு பஸ் நிலையம் அருகில் ம.தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ரோட்டில் அமர்ந்து பஸ்களை மறித்தனர். இதனால் அந்த பகுதியில் 20 நிமிடங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 70 பேரை போலீசார் கைது செய்தனர்.

செங்கொடி எழுச்சி பேரவை சார்பில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் உள்ள கர்நாடகா வங்கி மற்றும் ஏ.டி.எம். மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

நெல்லை மாநகரில் 4 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் மொத்தம் 57 பெண்கள் உள்பட 485 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டத்தின்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த நெல்லை சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை கை விரலில் காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறியது. உடனடியாக அவரது காயத்துக்கு கட்டு போடப்பட்டது.

இதுதவிர நெல்லை புறநகர் மாவட்டத்தில் 11 இடங்களில் நடந்த சாலை மறியலில் 298 பெண்கள் உள்பட 1,058 பேர் கைது செய்யப்பட்டனர். 4 இடங்களில் நடைபெற்ற ரெயில் மறியல் போராட்டத்தில் 58 பெண்கள் உள்பட 801 பேர் கைது செய்யப்பட்டனர். வீரகேரளம்புதூரில் 2 இடங்களில் நடைபெற்ற முற்றுகை போராட்டத்தில் 47 பேர் கைது செய்யப்பட்டனர். பாவூர்சத்திரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பூங்கோதை எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்டார்.

நெல்லை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 21 இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் 413 பெண்கள் உள்பட 2,391 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

மேலும், பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் இந்த போராட்டத்தை அவர்கள் நிறைவு செய்தனர்.

Next Story