தர்மபுரியில் இன்று டி.டி.வி.தினகரன் தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் - பழனியப்பன்


தர்மபுரியில் இன்று டி.டி.வி.தினகரன் தலைமையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் - பழனியப்பன்
x
தினத்தந்தி 6 April 2018 11:30 PM GMT (Updated: 6 April 2018 9:07 PM GMT)

தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன் தெரிவித்தார்.

தர்மபுரி,

தர்மபுரியில் இன்று (சனிக்கிழமை) டி.டி.வி.தினகரன் தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பழனியப்பன் தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் அருகில் இன்று (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்குவார் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி வழங்கபடாது என்று கட்சியின் மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரனுக்கு தகவல் கூறப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த கட்சியின் தலைமை நிலைய செயலாளர் பி.பழனியப்பன் நேற்று இரவு தர்மபுரி அதியமான் அரண்மனை கூட்ட அரங்கில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக மக்களின் ஜீவாதாரமாக விளங்கும் காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான பிரச்சினையில் தமிழகத்திற்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. இது தமிழக மக்களின் உணர்வு தொடர்பான பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், அதற்கு துணை போகும் தமிழக அரசை கண்டித்தும் தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், சாலை மறியல்கள் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி காவிரி கரையோர மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் காவிரி ஆறு நுழையும் முதல் மாவட்டமான தர்மபுரி மாவட்டத்தில் முதல் கட்டமாக ஆர்ப்பாட்டம் நடத்த கடந்த 3-ந்தேதி போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் கொடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை எதுவும் இருக்காது என்று போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு விட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சென்னையில் இருந்து கார் மூலம் தர்மபுரிக்கு வந்துவிட்டார். இந்த நிலையில் தற்போது ஆர்ப்பாட்டத்திற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தர்மபுரி மாவட்ட மக்கள் திரண்டு வந்து விடுவார்கள் என்ற பயம் ஆளுங்கட்சிக்கு ஏற்பட்டு உள்ளதால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. போலீசார் எந்த தடையை விதித்ததாலும் அந்த தடையை மீறி டி.டி.வி.தினகரன் தலைமையில் திட்டமிட்டபடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக தர்மபுரி வந்த டி.டி.வி.தினகரனுக்கு பழைய தர்மபுரியில் முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் தலைமையில் மேளதாளங்கள் முழங்க வாணவேடிக்கையுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். இளைஞரணி மாநில இணைசெயலாளர் ஆர்.ஆர்.முருகன், மாவட்ட செயலாளர் டி.கே.ராஜேந்திரன், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் பாலு, முன்னாள் மாவட்ட செயலாளர் பூக்கடை முனுசாமி, மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். வரவேற்பை பெற்றுக்கொண்ட டி.டி.வி.தினகரன் அந்த பகுதியில் கட்சியின் கொடியை ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

Next Story