பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட 108 கிலோ கஞ்சா பறிமுதல்


பெங்களூருவுக்கு கடத்தி வரப்பட்ட 108 கிலோ கஞ்சா பறிமுதல்
x
தினத்தந்தி 8 April 2018 5:23 AM IST (Updated: 8 April 2018 5:23 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசாவில் இருந்து பெங்களூருவுக்கு கடத்தி வந்த 108 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் கேரளாவை சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.

பெங்களூரு,

பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் குமார் தனது அலுவலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-

ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி வரும் ஒரு கும்பல் பெங்களூருவை மையமாக கொண்டு கர்நாடகம், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் கஞ்சா விற்பனை செய்வதாக மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த கும்பலுக்கு கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள வலப்பாட் கிராமத்தை சேர்ந்த நைனேஷ் (வயது 36) என்பவர் தலைவராக செயல்பட்டு வருவதும் தெரியவந்தது.

இவரை பற்றி விசாரித்தபோது நைனேஷ் மீது பெங்களூரு ஜீவன்பீமா நகர் மற்றும் கேரளாவின் பல்வேறு போலீஸ் நிலையங்களில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. மேலும், பெங்களூரு இந்திரா நகர் அருகே உள்ள ஈசுவரா நகரில் உள்ள நைனேசின் வீட்டை போலீசார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, இன்று (அதாவது நேற்று) அதிகாலை 3 மணியளவில் நைனேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 2 கார்களில் ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தி கொண்டு ஈசுவரா நகரில் உள்ள வீட்டுக்கு வந்தனர். இதுபற்றி முன்கூட்டியே அறிந்த போலீசார் அங்கு பதுங்கி இருந்து நைனேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 8 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், கைதானவர்கள் நைனேஷ், அவருடைய கூட்டாளிகளான கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்த அனாஸ்(26), பிரஜில்தாஸ் (27), ஷாபி குஞ்சுமரக்கார் (29), மலப்புராவை சேர்ந்த அக்‌ஷய்குமார் (22), திருவனந்தபுரத்தை சேர்ந்த சாஜன் (22), திருச்சூரை சேர்ந்த சினாஜ் (27), நஜீப் (25), முஸ்தாக் (20) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் அவர்கள் பெங்களூருவில் ஈஜிபுரா, முருகேஷ்பாளையா, பானசவாடி, ஹெண்ணூர், கே.ஆர்.புரம், ராமமூர்த்தி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. கைதானவர்களிடம் இருந்து 108 கிலோ கஞ்சா, 9 செல்போன்கள், 2 கார்கள், எலெக்ட்ரானிக் தராசு, ஏ.டி.எம். கார்டுகள் உள்பட பல்வேறு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.50 லட்சம் இருக்கும். பெங்களூருவில் ஒரே நேரத்தில் 108 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story