கடலூரில், வருகிற 12-ந்தேதி பொதுக்கூட்டம் மு.க.ஸ்டாலின்- கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்
கடலூரில், வருகிற 12-ந்தேதி காவிரி உரிமை மீட்பு பயண நிறைவு பொதுக் கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.
கடலூர்,
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்தும், மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் தராத மாநில அரசை கண்டித்தும் தி.மு.க. சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த 5-ந்தேதி தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. பின்னர் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில், திருச்சியில் இருந்து கடலூர் வரை காவிரி உரிமை மீட்பு பயணத்தை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நேற்று முன்தினம் திருச்சியில் இருந்து காவிரி உரிமை மீட்பு பயணம் தொடங்கியது. இந்த பயணத்தில் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த காவிரி உரிமை மீட்பு பயணம் வருகிற 12-ந்தேதி (வியாழக்கிழமை) கடலூரில் முடிவடைகிறது.
முன்னதாக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வல்லம்படுகைக்கு 12-ந்தேதி காலை வருகை தரும் மு.க.ஸ்டாலின், அங்கு விவசாயிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் சிதம்பரத்தில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர், அரியலூர் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு வரும் மற்றொரு குழுவினரோடு சேர்ந்து புவனகிரி வழியாக கடலூர் வருகிறார்.
இதையடுத்து அன்று மாலை 6 மணிக்கு கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் காவிரி மீட்பு பயண நிறைவு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தி.க. தலைவர் கி.வீரமணி உள்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பலர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.
கூட்டம் நிறைவடைந்ததும், கடலூரில் தங்கி ஓய்வு எடுக்கும் மு.க.ஸ்டாலின் மறுநாள் (13-ந்தேதி) கடலூரில் இருந்து புறப்பட்டு, சென்னையில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை கூட்டணி கட்சி தலைவர்களுடன் சென்று சந்தித்து கோரிக்கை மனுவை அளிக்கிறார்.
மு.க.ஸ்டாலின் கடலூர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க இருப்பதையொட்டி, மஞ்சக்குப்பம் மைதானத்தில் மேடை அமைப்பதற்கான இடத்தை நேற்று கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது அவர் மேடை அமைப்பது, தொண்டர்கள் அமருமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம் போன்ற பல்வேறு இடங்களை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கடலூரில் வருகிற 12-ந்தேதி மாலை 6 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள். ஆகவே இந்த கூட்டத்தில் கடலூர் மாவட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், வியாபாரிகள், வர்த்தகர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.
பேட்டியின் போது மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் இள.புகழேந்தி, நகர செயலாளர் ராஜா, மாவட்ட பொருளாளர் குணசேகரன், மாவட்ட மாணவரணி செயலாளர் நடராஜன், பொதுக்குழு உறுப்பினர் பாலமுருகன், நகர துணை செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story