கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்


கேரளாவுக்கு கடத்த முயன்ற 700 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்
x
தினத்தந்தி 10 April 2018 4:15 AM IST (Updated: 9 April 2018 11:04 PM IST)
t-max-icont-min-icon

புதுக்கடை அருகே கேரளாவுக்கு மினி டெம்போவில் கடத்த முயன்ற 700 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.

புதுக்கடை,

குமரி மாவட்ட ரே‌ஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும் அரிசி, மானிய விலையில் விற்கப்படும் மண்எண்ணெய் ஆகியவற்றை சிலர் மலிவு விலைக்கு வாங்கி கேரளாவுக்கு கடத்தி சென்று அதிக விலைக்கு விற்பனை செய்து வருகிறார்கள். மேலும், மீனவர்களுக்கு மீன்பிடி படகுகளில் பயன்படுத்துவதற்காக மானிய விலையில் வழங்கப்படும் மண்எண்ணெய்யும் கேரளாவுக்கு கடத்தி செல்லப்படுகிறது.

இதை தடுக்க மாவட்டத்தின் எல்லையில் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகிறார்கள். அத்துடன் வருவாய்துறை அதிகாரிகளும், போலீசாரும் ரோந்து சென்று கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர். ஆனாலும், கடத்தல்காரர்கள் நூதன முறையில் தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், மாவட்ட பறக்கும்படை தனிதாசில்தார் ராஜசேகர், துணை தாசில்தார் முருகன் மற்றும் அதிகாரிகள் நேற்று புதுக்கடை அருகே தொலையாவட்டம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த வழியாக ஒரு மினி டெம்போ வேகமாக சென்றது. அதிகாரிகள் அதை நிறுத்துமாறு சைகை காட்டினர். அதிகாரிகளை கண்டதும் டிரைவர் வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பி ஓடினார். தொடர்ந்து, வாகனத்தை சோதனையிட்ட போது, அதில் பிளாஸ்டிக் கேன்களில் 700 லிட்டர் மண்எண்ணெய் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மண்எண்ணெய் கேரளாவுக்கு கடத்தி செல்ல முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள் மண்எண்ணெய்யை டெம்போவுடன் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, தப்பியோடிய டிரைவரை தேடி வருகிறார்கள்.


Next Story