முழுமானிய கியாஸ் நுகர்வோரை 18 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை அதிகாரி தகவல்


முழுமானிய கியாஸ் நுகர்வோரை 18 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 16 April 2018 10:45 PM GMT (Updated: 16 April 2018 9:14 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் முழுமானிய கியாஸ் நுகர்வோரை 18 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிவாயு இணைப்பிற்கான பெரம்பலூர் மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.

பெரம்பலூர்,

மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை சார்பில் கிராம சுவராஜ் அபியான் திட்டத்தின்கீழ் ஏழை-எளிய நகர்ப்புற-கிராமப்புற மக்களுக்கு பிரதம மந்திரி திட்டத்தின்கீழ் முழுமானியத்துடன் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் பெரம்பலூர் மாவட்டத்தில் 19 கிராமங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த கிராமங்களில் தலா 100 இணைப்பு வீதம் 1,900 பேருக்கு முழுமானியத்தில் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக வருகிற 20-ந்தேதி சிறப்பு கிராம சபைக்கூட்டம் நடக்க உள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கிவரும் அரசு அங்கீகாரம் பெற்ற கியாஸ் வினியோகஸ்தர்கள் கூட்டம் தனலட்சுமி சீனிவாசன் ஓட்டலில் நடந்தது. இதில் கஜேந்திரன், பிரபாகரன், நெற்குணம் சங்கர் உள்பட 14 வினியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர். எரிவாயு இணைப்பிற்கான பெரம்பலூர் மாவட்ட அதிகாரி ஜெயசங்கர் பிரதம மந்திரியின் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விளக்கி பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடு முழுவதும் 15ஆயிரம் கிராம ஊராட்சிகளை தேர்வு செய்து 20-ந்தேதி முழுமானியத்தில் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வசிப்பவர் மற்றும் மகளிர் என 5 கோடி பேருக்கு முழுமானியத்துடன் கியாஸ் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டு இதுவரை 3 கோடியே 60 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2020-க்குள் இந்தியா முழுவதும் 8 கோடி பேருக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி திட்டத்தின் கீழ் முழுமானியத்தில் இதுவரை 16 ஆயிரத்து 260 பேருக்கு சமையல் கியாஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முழுமானிய கியாஸ் நுகர்வோரை 18 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story