வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 10 பவுன் நகைகள் கொள்ளை


வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 10 பவுன் நகைகள் கொள்ளை
x
தினத்தந்தி 17 April 2018 4:45 AM IST (Updated: 17 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

ஆடுதுறை அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று 10 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள ஆடுதுறை தெற்கு சேனியத்தெருவை சேர்ந்தவர் ஹஜீதாபீவி (வயது 69). இவரது கணவர் முகமது சாலிக் 30 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவரது ஒரே மகன் சபீர்முகமது(40). இவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 8 சகோதரிகள் உள்ளனர்.

வீட்டில் தனியாக வசித்து வந்த ஹஜீதாபீவி கடந்த 2 நாட்களுக்கு முன்புதான் உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இவரது தங்கை மகபுனிசா அக்கா ஹஜீதாபீவிற்கு போன் செய்துள்ளார். அப்போது போனில் ஆண் குரல் கேட்டுள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த மகபுனிசா தனது அக்கா வீட்டிற்கு பக்கத்தில் உள்ளவர்களுக்கு போன் பண்ணி அக்கா வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லியுள்ளார். உடனே அக்கம், பக்கத்தினர் அங்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு அடைக்கப்பட்டிருந்தது. இதனால் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.

அப்போது குளியல் அறைக்கு செல்லும் வழியில் ஹஜீதாபீவி வாய், மூக்கு, காதில் ரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வீட்டின் பின்கதவு திறந்து கிடந்தது. உடனடியாக அவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவல் அறிந்து வந்த திருவிடைமருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் ஹஜீதாபீவி வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

அப்போது வீட்டில் இருந்த பீரோக்கள் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. கழிவறைக்கு செல்லும் வழியில் ஹஜீதாபீவி வாய், மூக்கு, காதில் ரத்தம் வழிந்தபடி இறந்து கிடந்தார். அவரது உடல் கிடந்த அருகில் தலையணை ஒன்று கிடந்தது.

தலையணையை பயன் படுத்தி கொலையாளிகள் ஹஜீதாபீவியை கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் ஹஜீதாபீவி அணிந்து இருந்த சங்கிலி, தோடு உள்ளிட்ட 9¾ பவுன் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

பின்னர் ஹஜீதாபீவியின் உடலை போலீசார் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் பீரோவில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் நேற்று அதிகாலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் சம்பவம் நடந்த வீட்டுக்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினார். போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அந்த வீட்டில் பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்தனர்.

இதுகுறித்து திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்து சென்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story