7-வது கட்ட சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி வருகிற 26-ந்தேதி கர்நாடகம் வருகை


7-வது கட்ட சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி வருகிற 26-ந்தேதி கர்நாடகம் வருகை
x
தினத்தந்தி 17 April 2018 4:30 AM IST (Updated: 17 April 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

ராகுல்காந்தி வருகிற 26-ந்தேதி கர்நாடக மாவட்டங்களில் வாக்கு சேகரிக்கிறார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி 7-வது கட்ட சுற்றுப்பயணமாக ராகுல்காந்தி வருகிற 26-ந்தேதி கர்நாடகத்திற்கு வருகிறார். அவர் அன்றைய தினம் கதக், ஹாவேரி மாவட்டங்களில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கிறார்.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் மோடி ஆகியோர் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

அதேப் போல் காங்கிரஸ் கட்சியை ஆதரித்து அக்கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல்காந்தி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் இதுவரை கர்நாடகத்தில் 6 கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இறுதியாக அவர் கடந்த 7 மற்றும் 8-ந்தேதிகளில் கோலார், சிக்பள்ளாப்பூர், பெங்களூருவில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 25 நாட்களே உள்ளன. இந்த நிலையில் ராகுல்காந்தி கர்நாடகத்தில் மேலும் 2 கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதாவது வருகிற 26-ந்தேதி மற்றும் 27-ந்தேதி ஆகிய நாட்கள் கர்நாடகத்திற்கு ராகுல்காந்தி வருகை தருகிறார். அவர் 26-ந்தேதி கதக், ஹாவேரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து காங்கிரசுக்கு ஆதரவு கேட்கிறார்.

அதன் பின்னர் 27-ந்தேதி கார்வார், குடகு மாவட்டங்களில் அவர் வாக்கு சேகரிக்கிறார். அத்துடன் 7-வது கட்ட சுற்றுப்பயணத்தை அவர் முடித்துக்கொண்டு டெல்லி செல்கிறார்.

அதன் பின்னர் அடுத்த மாதம் (மே) 3-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை ஒரு வாரம் கர்நாடகத்தில் தங்கியிருந்து மாநிலம் முழுவதும் சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். மேலும் தேர்தல் பிரசாரத்தின் இறுதிநாளான மே 10-ந்தேதி அவர் பெலகாவியில் பிரமாண்ட பேரணியில் கலந்துகொள்கிறார்.

Next Story