சேலத்தில், குடிபோதையில் தகராறு: பெயிண்டர் அடித்துக்கொலை


சேலத்தில், குடிபோதையில் தகராறு: பெயிண்டர் அடித்துக்கொலை
x
தினத்தந்தி 18 April 2018 5:00 AM IST (Updated: 18 April 2018 5:00 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

கொண்டலாம்பட்டி,

சேலத்தில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம் கொண்டலாம்பட்டி மலங்காடு வைத்தியகாரன் காட்டை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது48), பெயிண்டர். இவருடைய மனைவி சரஸ்வதி(40). இவர்களுக்கு ரேவதி என்ற மகளும், பூபதி(20) என்ற மகனும் உள்ளனர். தந்தை, மகன் இருவருக்கும் மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு சுப்பிரமணி, பூபதி ஆகிய இருவரும் மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தனர். இதையடுத்து அவர்கள் இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இது கைகலப்பாக மாறியது. வீட்டுக்கு வெளியே ரோட்டில் வைத்து இருவரும் தகராறில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது பூபதி, தனது தந்தை சுப்பிரமணியை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் கீழே கிடந்த கல் அவருடைய தலையை பலமாக தாக்கியது. உடனே சுப்பிரமணி மயக்கம் அடைந்தார். இதை கவனிக்காமல் பூபதியும் அங்கிருந்து சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை அங்கு சுப்பிரமணி இறந்து கிடந்ததை பார்த்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் அவருடைய உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பூபதியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறும் போது, ‘சம்பவத்தன்று தந்தை, மகன் இருவருக்கும் இடையே குடிபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் தாக்கி உள்ளனர். இதில் பூபதி அடித்ததுடன், கீழே தள்ளியதில் சுப்பிரமணி விழுந்து இறந்துள்ளார். இதனால் தற்போது சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர் மேல் விசாரணை நடத்தப்படும். மேலும் கொலை வழக்காக மாற்றப்படும்‘ என்றனர்.

Next Story