7பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்


7பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 19 April 2018 4:15 AM IST (Updated: 19 April 2018 2:45 AM IST)
t-max-icont-min-icon

7 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து துவாக்குடியில் உள்ள மதுபான கிடங்கில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவெறும்பூர்,

திருச்சி துவாக்குடியில் தமிழ்நாடு வாணிப கழக மதுபான கிடங்கு உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்படும் மதுபாட்டில்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன. மதுபாட்டில்களை லாரிகளில் இருந்து இறக்கி, ஏற்றும் பணியில் 62 சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 13–ந் தேதி சுமை தூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்தபோது துணை கலெக்டரும், மதுகிடங்கு பொது மேலாளருமான செல்வம் கிடங்கில் திடீர்ஆய்வு நடத்தினார். அப்போது சுமை தூக்கும் தொழிலாளர்கள் 7 பேரிடம் இருந்து பதுக்கி வைத்திருந்த 86 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 11 பேர் அங்கிருந்து தப்பி விட்டனர்.

 இது தொடர்பாக மன்னார்புரத்தில் உள்ள மதுவிலக்கு பிரிவு போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் மதுக்கிடங்கில் நேற்று சுமை தூக்கும் தொழிலாளர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் அதிகாரிகள் வந்து, 7 பேர் மதுபாட்டில்களை திருடியதை அனைவரும் பார்த்ததாக கையெழுத்து போடும்படி கூறினர். இதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர்.


இந்நிலையில் மதுபாட்டில்களை திருடிய ஆரோக்கியசாமி, நல்லமுத்து, சேசுராஜ், ராமர், ஜான்சன், கிருஷ்ணகுமார், சதீஷ்குமார் ஆகிய 7 பேரையும் பணிநீக்கம் செய்து விட்டோம். தப்பிய அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்த 11 பேர் வேலைக்கு வரக்கூடாது. அவர்களை பணியில் சேர்ப்பது குறித்து ஒரு வாரத்துக்கு பின்னர் பார்க்கலாம். அனைத்து பணியாளர்களும் ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், 11 பேரையும், வேலைக்கு வர அனுமதிக்க கோரியும், சக தொழிலாளர்கள் சரக்கு லாரிகளில் இருந்து மதுபாட்டில்களை இறக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தாசில்தார் ஷோபா, சி.ஐ.டி.யு. தொழிற்சங்க நிர்வாகிகள் சதீஷ், ரமேஷ், அண்ணா தொழிற்சங்க நிர்வாகி அருள்ராஜ், டாஸ்மாக் பணியாளர் சங்க மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், துவாக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சண்முகசுந்தரம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.


 இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றி வந்த லாரிகளில் மதுபாட்டில்களை இறக்கும் பணி பாதிக்கப்பட்டது. இதேபோல் மாவட்டதில் உள்ள 173 டாஸ்மாக் கடைகளுக்கும் மதுபாட்டில்கள் ஏற்றும் பணியும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து போராட்டம் நீடித்தால் டாஸ்மாக் கடைகளில் மது தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உள்ளது.

Next Story