வீடு கட்ட பணம் வாங்கி தராததால் 8 மாத கர்ப்பிணியை சுவரில் தள்ளி கொலை செய்த கணவன் கைது


வீடு கட்ட பணம் வாங்கி தராததால் 8 மாத கர்ப்பிணியை சுவரில் தள்ளி கொலை செய்த கணவன் கைது
x
தினத்தந்தி 19 April 2018 4:00 AM IST (Updated: 19 April 2018 2:46 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில், வீடு கட்ட பணம் வாங்கி தராததால் சுவரில் தள்ளி 8 மாத கர்ப்பிணியை கொலை செய் கணவனை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மானம்புச்சாவடி மேட்டு எல்லையம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்(வயது 30). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் திருச்சி காஜாப்பேட்டையை சேர்ந்த காயத்ரி(23) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. 1½ வயதில் அஸ்வத் என்ற மகன் உள்ளார். தற்போது காயத்ரி 8 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

காயத்ரியை அவரது பெற்றோர் மாதத்திற்கு ஒருமுறை வந்து பார்ப்பது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று திருச்சியில் இருந்து காயத்ரியை பார்ப்பதற்காக அவரது பெற்றோர் வந்தனர். அப்போது சுந்தர், அவர்களிடம் வீடு கட்டுவதற்கு பணம் கொண்டு வந்திருக்கிறீர்களா? என கேட்டார். உடனே காயத்ரி, தனது கணவரிடம் வீடு கட்ட அஸ்திவாரம் கூட தோண்டவில்லை, அதற்குள் பணம் கேட்கிறீர்களே? என கேட்டுள்ளார்.

அதற்கு சுந்தர், திருமணத்திற்கு சீர்வரிசையாக மோட்டார் சைக்கிள் வாங்கித்தருவதாக கூறினார்கள். ஆனால் தரவில்லை. தற்போது வீடு கட்டுவதற்கும் உனது பெற்றோரிடம் பணம் வாங்கித்தரவில்லையே என கூறி உள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுந்தர், மனைவி என்றும் பாராமல் காயத்ரியின் தலைமுடியை பிடித்து சுவரில் தள்ளினார்.

இதில் காயத்ரியின் தலையின் பின்பக்கம் சுவற்றில் மோதியதில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது விபத்தில் காயத்ரிக்கு காயம் ஏற்பட்டதாக கூறி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி காயத்ரி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தஞ்சை நகர கிழக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) ஜோதிமகாலிங்கம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் காயத்ரிக்கு விபத்தில் காயம் ஏற்படவில்லை என்பதும், சுவரில் தள்ளி கணவரே கொலை செய்ததும் தெரிய வந்தது.

இதையடுத்து சுந்தரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story