பொள்ளாச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்


பொள்ளாச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 April 2018 4:45 AM IST (Updated: 19 April 2018 4:45 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயமடைந்தனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே அரசு பஸ் கவிழ்ந்து 15 பேர் படுகாயமடைந்தனர். மீட்பு பணிக்கு சென்ற ஆம்புலன்சில் தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொள்ளாச்சியில் இருந்து நேற்று பகல் 12.40 மணிக்கு சிங்காநல்லூருக்கு அரசு பஸ் புறப்பட்டு சென்றது. இந்த பஸ்சை பூசாரிபட்டியை சேர்ந்த முருகவேல் (வயது 33) என்பவர் ஓட்டி சென்றார். கண்டக்டராக குள்ளிசெட்டிபாளையத்தை சேர்ந்த காளிமுத்து (46) என்பவர் இருந்தார். பஸ்சில் 20 பயணிகள் இருந்தனர். இநத நிலையில் பஸ் சிங்காநல்லூர் அருகே வளைவான பகுதியில் சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே பஸ்சுக்குள் சிக்கியவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூக்குரலிட்டனர்.

சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த வக்கம்பாளையம், சிங்காநல்லூர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையில் ஆனைமலை போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது படு காயமடைந்த 15 பேரை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 15 பேர் விவரம் வருமாறு:-

பூசாரிபட்டியை சேர்ந்த டிரைவர் முருகவேல் (33), குள்ளிசெட்டிபாளையத்தை சேர்ந்த கண்டக்டர் காளிமுத்து (43), வக்கம்பாளையத்தை சேர்ந்த சின்னப்பன் (55), சகுந்தலா (48), பொள்ளாச்சி எல்.ஐ.ஜி. காலனியை சேர்ந்த பரீதா (30), சிங்காநல்லூரை சேர்ந்த தேவி (60), மகேஸ்வரி (36), ராஜமணி (43), சரவணகுமாரி (34), கெட்டிமல்லன்புதூரை சேர்ந்த லட்சுமி (38), காளிமுத்து (45), வேட்டைக்காரன்புதூரை சேர்ந்த சகுந்தலாலட்சுமி (42), திருப்பூரை சேர்ந்த சுஜாதா (34), கொடுவலூரை சேர்ந்த மணிகண்டன் (29), ஆவல் சின்னாம்பாளையத்தை சேர்ந்த லதா (40).

இதற்கிடையில் பஸ் கவிழ்ந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செல்போன் மூலம் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பொள்ளாச்சியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் விபத்து நடந்த இடத்தை நோக்கி அலாரம் அடித்து கொண்டு மின்னல் வேகத்தில் சென்று கொண்டிருந்தது. சிங்காநல்லூர் அருகில் வந்த போது, ஆம்புலன்ஸ் வாகனத்தின் முன் பகுதியில் புகை கிளம்பியது. இதையடுத்து டிரைவர் ஆம்புலன்சை ரோட்டோரத்தில் நிறுத்தினார்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தின் என்ஜின் பகுதியில் தீப்பிடிக்க தொடங்கியது. இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில் தீயணைப்படை வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் ஆம்புலன்சின் என்ஜின் பகுதியில் பிடித்த தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வாகனம் செல்ல தாமதம் ஆனதால் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்தவர்களை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story