பாதாமி தொகுதியில் போட்டியிடும் விவகாரம் சித்தராமையா பேட்டி


பாதாமி தொகுதியில் போட்டியிடும் விவகாரம் சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 19 April 2018 11:18 PM GMT (Updated: 19 April 2018 11:18 PM GMT)

பாதாமி தொகுதியில் போட்டியிடும் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிட உத்தரவுக்கு கட்டுப்படுவேன் என்று சித்தராமையா கூறினார்.

மைசூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தொகுதியிலும் அவர் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது. ஆனால் பாதாமி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட நாகராஜ் பட்டீல் என்பவர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக உள்ள சிம்மனகட்டிக்கு டிக்கெட் மறுக்கப்பட்டது.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நாகராஜ் பட்டீலுக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. அதனால் அவருக்கு பதிலாக சித்தராமையாவே போட்டியிட வேண்டும் என்று அந்த தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் வலியுறுத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் சித்தராமையாவை சந்தித்து அந்த தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். பாதாமி தொகுதியில் தாங்கள் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று வருணா தொகுதியில் பிரசாரம் செய்த சித்தராமையாவை பாதாமி தொகுதி காங்கிரஸ் நிர்வாகிகள் சந்தித்து, தங்கள் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று அவரிடம் மீண்டும் வலியுறுத்தினர். அதற்கு பதிலளித்த சித்தராமையா, நீங்கள் போங்கள், நானே உங்கள் தொகுதியில் போட்டியிடுகிறேன்“ என்றார்.

இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “நான் முதல்-மந்திரி. நான் கட்சி மேலிடம் கிடையாது. கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ அந்த முடிவை ஏற்பேன். மேலிடம் என்ன சொல்கிறது என்று எனக்கு தெரியவில்லை. 2 தொகுதிகளில் போட்டியிடுமாறு மேலிடம் கூறினால் அந்த முடிவுக்கு கட்டுப்படுவேன். பாதாமி தொகுதியில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. இதே கேள்வியை திரும்ப திரும்ப என்னிடம் கேட்காதீர்கள். மக்கள் எந்த குழப்பமும் அடையவில்லை. பாதாமி தொகுதி மக்கள் தெளிவாக உள்ளனர். உங்களுக்கு(பத்திரிகையாளர்கள்) தான் குழப்பம் ஏற்பட்டுள்ளது“ என்றார்.

பாதாமி தொகுதியில் சித்தராமையா சார்ந்துள்ள குருப சமூக மக்களின் ஓட்டுகள் அதிகமாக உள்ளன. மேலும் அவர் வட கர்நாடகத்தில் போட்டியிட்டால் அந்த பகுதியில் காங்கிரஸ் கட்சி அதிக தொகுதிகளில் வெற்றி பெற சாதகமான சூழ்நிலை ஏற்படும் என்று காங்கிரசார் கருதுகிறார்கள். ஆனால் இதற்கு மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட மூத்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 

Next Story