அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி


அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதல்: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி
x
தினத்தந்தி 19 April 2018 11:47 PM GMT (Updated: 19 April 2018 11:47 PM GMT)

அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதியதில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி, 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

நத்தம்,

அரசு பஸ்-கார் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் திலிபன் சக்கரவர்த்தி (வயது 21). இவர், நத்தத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தார். இவர், அதே கல்லூரியில் படிக்கிற தனது நண்பர்களுடன் நத்தத்தில் இருந்து மதுரை நோக்கி காரில் சென்றார். காரை, திலிபன் சக்கரவர்த்தி ஓட்டினார்.

நத்தம்-மதுரை சாலையில் புதுக்கோட்டை விலக்கு அருகே கார் சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வழியாக மதுரையில் இருந்து சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பஸ், கார் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் திலிபன் சக்கரவர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மேலும் காரில் பயணம் செய்த மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர்களான ஜெயக்குமார் (23), ஆரோக்கியதாஸ், மித்ரு ரூபன், ஜீவா, ஹரிவிக்னேஷ், அரவிந்த் மேத்யூ ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர் களை மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜெயக்குமார் பரிதாபமாக இறந்தார். மீதமுள்ள 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து நத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story