சி.பி.சி.ஐ.டி. காவலில் இருக்கும் நிர்மலாதேவியிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் இன்று விசாரணை


சி.பி.சி.ஐ.டி. காவலில் இருக்கும் நிர்மலாதேவியிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் இன்று விசாரணை
x
தினத்தந்தி 21 April 2018 4:45 AM IST (Updated: 21 April 2018 2:02 AM IST)
t-max-icont-min-icon

சி.பி.சி.ஐ.டி. காவலில் இருக்கும் பேராசிரியை நிர்மலாதேவியிடம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்துகிறார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை தேவாங்கர் கலைக் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளுக்கு பாலியல் வலைவிரித்த சம்பவம் தொடர்பாக விசாரனை நடத்த, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தானம், தமிழக கவர்னரால் நியமிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் அவர் மதுரையில் விசாரணையை தொடங்கினார். அதன்பின் அருப்புக்கோட்டை வந்தார்.

நேற்று காலை 10 மணிக்கு தேவாங்கர் கல்லூரிக்கு வந்து விசாரணையை தொடங்கினார். இந்த விசாரணைக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பேராசிரியை கமலி, மதுரை வேளாண்மை கல்லூரி பேராசிரியை தியாகேஸ்வரி ஆகியோரும் அவருடன் வந்திருந்தனர்.

முதற்கட்டமாக கல்லூரி செயலாளர் ராமசாமி, முதல்வர் (பொறுப்பு) பாண்டியராஜன், நிர்வாகிகள், முன்னாள் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை நண்பகல் 2.30 மணி வரை நடைபெற்றது.

பின்னர் அதிகாரி சந்தானம் நிருபர்களிடம் கூறியதாவது:-

“கல்லூரியில் இது வரை 9 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளேன். மேலும் 12 பேரிடம் விசாரணை நடத்த உள்ளேன்.

பேராசிரியை குறித்து புகார் அளித்த 4 மாணவிகள் குறித்த செய்திகளை வெளியிட வேண்டாம். மாணவிகள் குறித்து ஊடகங்களில் செய்தி வருவதால் அவர்கள் மனஉளைச்சலில் தேர்வு எழுதுவது பாதிக்க கூடும்.

பேராசிரியை குறித்து தகவல் அளிக்க முன்வந்தால் விசாரணை நடத்த தயாராக உள்ளோம். நாளை(இன்று) அல்லது 25-ந் தேதி நிர்மலாதேவியிடம் விசாரணை நடத்த உள்ளேன். சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தாலும், அவரிடம் விசாரணை மேற்கொள்ள எனக்கு எந்த தடையுமில்லை.

நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் ஒருவர் எழுத்துப்பூர்வமாக புகார் கூறியுள்ளார்.

இவ்வாறு சந்தானம் கூறினார்.

பின்பு அவர் மாலை 3.30 மணிக்கும் கல்லூரிக்கு வந்து 2-வது கட்ட விசாரணையை நடத்தினார். இரவு 9 மணிவரை அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தினார். முன்னாள் மாணவிகள் உள்பட 20 பேர் வரை அவர் விசாரித்தார். இதனைதொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், அடுத்த கட்டமாக கல்லூரி செயலாளர் மற்றும் முதல்வரை மதுரைக்கு அழைத்து விசாரணை நடத்த இருப்பதாகவும் நாளை(இன்று) மதுரையில் முகாமிட்டு விசாரணை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். விசாரணையை நீட்டிக்க கால அவகாசம் கேட்காமல் குறித்த காலத்துக்குள் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.

அதிகாரி சந்தானம் காலையில் கல்லூரியில் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரேணுகாதேவி, ஜெயலட்சுமி ஆகியோரும் கல்லூரிக்கு வந்தனர்.

அவர்கள் தனியாக கல்லூரியின் மற்றொரு பகுதியில் விசாரணை மேற்கொண்டனர். இவர்களது விசாரணை சுமார் 1 மணி நேரம் நடந்தது. 

Next Story