காவல்துறையினர் நடுநிலையோடு செயல்படாவிட்டால் நீதிமன்ற படிக்கட்டுகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்


காவல்துறையினர் நடுநிலையோடு செயல்படாவிட்டால் நீதிமன்ற படிக்கட்டுகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்
x
தினத்தந்தி 20 April 2018 10:30 PM GMT (Updated: 20 April 2018 8:55 PM GMT)

காவல்துறையினர் நடுநிலையோடு செயல்படாவிட்டால் நீதிமன்ற படிக்கட்டுகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும் என நாமக்கல்லில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி. தினகரன் எச்சரிக்கை விடுத்தார்.

நாமக்கல், 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நேற்று, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் நாமக்கல் பூங்கா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தலைமை தாங்கினார். அவை தலைவர் அன்பழகன், முன்னாள் அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பழனியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளர் பி.பி.சாமிநாதன் வரவேற்று பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்தபோது தமிழக மக்களை பாதிக்கின்ற எந்த ஒரு திட்டத்தையும் அனுமதித்தது இல்லை. ஆனால் அவர் வழி நடக்கும் ஆட்சி என்று சொல்லும் இப்போதுள்ள ஆட்சியாளர்கள், மத்திய அரசு சொல்வதை கேட்டுக்கொண்டு, இங்கு எந்த ஒரு மக்கள் பிரச்சினையையும் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.

எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயம் தமிழக மக்கள் ஜெயலலிதாவின் உண்மையான ஆட்சியை கொடுக்கக்கூடியவர்கள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நாம் தான் என உணர்ந்து வைத்திருக்கின்றனர். அதனால் தான் ஆட்சியாளர்கள் பயந்துகொண்டு, எங்களுடைய பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு காவல்துறையினரை வைத்துக்கொண்டு அனுமதி அளிக்க மறுக்கின்றனர்.

இங்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வந்தவர்களின் வாகனம் ராசிபுரம் அருகில் தடுத்து நிறுத்தப்பட்டு, வேறு பாதையில் திருப்பி அனுப்பப்பட்டது. காவல்துறையினர், போக்குவரத்து துறையினரை பயன்படுத்தி, கூட்டத்திற்கு வருபவர்களை தடுக்க இந்த முயற்சியில் ஈடுபட்டனர். இந்த வேலையை செய்பவர் யார் என இங்குள்ள மக்களுக்கு தெரியும்.

சசிகலா கோரிக்கையை ஏற்று தான், கூவத்தூர் விடுதியில் இருந்த எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சராக தேர்வு செய்தனர். அப்போது அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி இருவரும் என்னை துணை முதல்-அமைச்சராக வேண்டும் என வற்புறுத்தினர். அப்போது நான் நினைத்திருந்தால் முதல்-அமைச்சராக ஆகி இருக்க முடியும், ஆனால் கட்சியும், ஆட்சியும் காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக எந்த ஒரு பதவியையும் நான் ஏற்க மறுத்துவிட்டேன். சசிகலா சிறை செல்ல நேர்ந்தபோது என்னை துணைப் பொதுச்செயலாளர் ஆக்க வேண்டும் என கோரிக்கை வைத்ததே அமைச்சர் தங்கமணி தான்.

அமைச்சர்கள் அனைவரும் வருமானவரி சோதனை பயத்தில் உள்ளனர், மடியில் கனம் இருப்பதால் பயம் அதிகமாக இருக்கிறது. துரோகத்தை தமிழக மக்கள், குறிப்பாக கொங்கு மண்டல மக்கள் என்றைக்கும் மன்னிக்க மாட்டார்கள். எப்போது தேர்தல் வந்தாலும் அவர்கள் அனைவரும் டெபாசிட் இழப்பார்கள்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக உறுப்பினர் சேர்க்கை முடிந்தவுடன் ஜூன் மாதத்தில் இருந்து நான் நாமக்கல்லில் தங்கி இங்குள்ள 6 சட்டப்பேரவை தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதியாக சென்று மக்களை சந்தித்து, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் முகமூடிகளை கிழித்தெறிவேன்.

உங்களை நாங்கள் நிம்மதியாக இருக்கவிட மாட்டோம், ஆட்சி, அதிகாரம் இருப்பதால் அடக்கி விடலாம் என நினைக்கிறார்கள், நாங்கள் ஜெயலலிதாவிடம் பாடம் பயின்றவர்கள், நீங்கள் செல்வகணபதியிடம் பாடம் பயின்றவர்கள், அவர் போகும் வழியில் நீங்கள் செல்வதற்கான காலம் நெருங்கிவிட்டது, அரசியலில் நீங்கள் எல்லாம் அனாதையாகி விடுவீர்கள். ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களின் பேச்சை கேட்டுக்கொண்டு செயல்பட்டுக்கொண்டிருக்கும், காவல்துறை அதிகாரிகளை கடுமையாக கண்டிக்கிறேன். நடுநிலையோடு செயல்படுங்கள், இல்லையென்றால் நீதிமன்றத்தின் படிக்கட்டுகளில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதில் அமைப்பு செயலாளர் சேலஞ்சர் துரை, முன்னாள் அமைச்சர் செந்தமிழன், அவை தலைவர்கள் நாச்சிமுத்து, நல்லியப்பன், பொருளாளர்கள் அன்புசெழியன், சண்முக சுந்தரம், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் ராஜ்குமார், மகளிர் அணி நிர்வாகிகள் ஹேமலதா, பாலம்மாள், வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் கோபால், நாமக்கல் ஆனந்த் உள்பட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஜெ.தீபா பேரவை நிர்வாகிகள் உள்பட பல்வேறு கட்சியினர் டி.டி.வி. தினகரன் முன்னிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர். முடிவில் அமைப்பு செயலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

Next Story