விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து கீரமங்கலத்தில் தே.மு.தி.க.வினர் சாலைமறியல்
விஜயகாந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து கீரமங்கலத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கீரமங்கலம்,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கர்நாடகாவை சேர்ந்த சூரப்பாவை துணை வேந்தராக நியமித்ததை எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துணைவேந்தர் சூரப்பாவை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சென்னையில் தே.மு.தி.க சார்பில் விஜயகாந்த் தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி ஊர்வலமாக சென்றவர்களை போலீசார் தடுத்தனர்.
இதைத்தொடர்ந்து தே.மு.தி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து போலீசார் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் உள்பட தே.மு.தி.க.வினரை போலீசார் கைது செய்தனர். இதை கண்டித்தும், துணைவேந்தர் சூரப்பாவை திரும்ப பெற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே தே.மு.தி.க. வினர் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இதற்கு ஒன்றிய செயலாளர் விஜயராஜகுமாரன் தலைமை தாங்கினார். நகரசெயலாளர் தனசேகரன், ஒன்றிய அவை தலைவர் பால்ராஜ், மாவட்ட இலக்கிய அணி பெரியமுரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாலை மறியல் நடந்து கொண்டிருந்தபோது பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் ஒரு தனியார் பஸ் மாற்று பாதையில் செல்ல முயன்றபோது தே.மு.தி.க. வினர் அந்த பஸ்சை ஓடிச் சென்று மறித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட தே.மு.தி.க.வினர் 15 பேரை கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதே கோரிக்கையை வலியுறுத்தி தே.மு.தி.க. நிர்வாகி பரஞ்ஜோதி புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுக்கோட்டை டவுன் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பரஞ்சோதியை கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story