மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார் என புதுக்கோட்டையில் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி கூறினார்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே உள்ள வம்பன் பயறு வகை ஆராய்ச்சி மையம், வல்லத்திராக்கோட்டை பழப்பண்ணை, குடுமியான்மலை அண்ணா பண்ணை ஆகியவற்றை தமிழக அரசின் வேளாண்மைத்துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங்பேடி, மாவட்ட கலெக்டர் கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தமிழகத்தில் உள்ள அரசு பண்ணைகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு ரூ.30 கோடி நிதி ஒதுக்கி உள்ளது. தற்போது உள்ள சூழ்நிலையில் விவசாயிகள் போதிய நீர் கிடைக்காமல்் அவதிப்பட்டு வருகின்றனர். காவரியில் இருந்து நீர் கிடைப்பதற்கு தமிழக அரசு அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும் குறைந்த அளவு நீரை பயன்படுத்தி விவசாயம் செய்வதற்கு அரசு சொட்டு நீர் பாசனத்தை ஊக்குவித்து வருகிறது. இந்த ஆண்டு சொட்டு நீர் பாசனத்திற்காக ரூ.982 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மானியத்திலும், பெரிய விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியத்திலும் சொட்டு நீர்பாசனம் அரசு வழங்கி வருகிறது. தற்போது மேட்டுர் அணையில் குறைந்த அளவாக 36 கனஅடி நீர் தான் இருப்பில் உள்ளது. எனவே ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து விவசாயத்திற்கு நீர் திறப்பது குறித்து முதல்-அமைச்சர் முடிவு எடுப்பார்.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்க கூடிய பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றிற்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தான் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை சேமித்து வைத்து உரிய விலை கிடைக்கும் போது விற்பனை செய்வதற்காக ரூ.398 கோடி மதிப்பில் குளிர்பதன கிடங்கிகள் கட்டப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story