சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட சித்தராமையா வேட்பு மனு தாக்கல்


சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட சித்தராமையா வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 20 April 2018 11:42 PM GMT (Updated: 20 April 2018 11:42 PM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிட சித்தராமையா வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 553 மனுக்கள் தாக்கலானது.

மைசூரு,

கர்நாடகத்தில் அடுத்த மாதம்(மே) 12-ந் தேதி சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 17-ந் தேதி தொடங்கியது. இதில் மைசூரு மாவட்டம் சாமுண்டீஸ்வரி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் முதல்-மந்திரி சித்தராமையா போட்டியிடுகிறார். இதற்காக அவர் 20-ந் தேதி(அதாவது நேற்று) வேட்புமனு தாக்கல் செய்யப்போவதாக அறிவித்திருந்தார்.

அதன்படி நேற்று மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள தனது வீட்டில் இருந்து முதல்-மந்திரி சித்தராமையா வேட்புமனு தாக்கல் செய்ய புறப்பட்டார். அவருடன் அவருடைய மகனும், வருணா தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான யதீந்திரா மற்றும் குடும்பத்தார், உறவினர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் என பலரும் புறப்பட்டனர்.

முதலில் முதல்-மந்திரி சித்தராமையா தனது சொந்த ஊரான சித்தராமனஉண்டி கிராமத்தில் அமைந்துள்ள குலதெய்வ கோவிலான சித்தராமேஸ்வரர் கோவிலுக்கு சென்று வேட்புமனுவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். அதையடுத்து அங்கிருந்து புறப்பட்ட சித்தராமையா மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு சென்று அம்மனின் முன்பு வேட்புமனுவை வைத்து பூஜை செய்து வழிபட்டார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சித்தராமையா மைசூரு அரண்மனை அருகே உள்ள கோட்டை ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து பூஜைகள் மேற்கொண்டு சாமி தரிசனம் செய்தார். இதற்கிடையே மைசூரு கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகே சாமராஜ உடையார் சர்க்கிள் பகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சியினரும், காங்கிரசாரும் போட்டி பேரணியில் ஈடுபட்டனர். இதனால் போலீசாரின் தடையை மீறி போட்டி பேரணியில் ஈடுபட்ட காங்கிரசார் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

தடியடி சம்பவம் நடந்து முடிந்து சுமார் 30 நிமிடங்கள் கழித்துதான் சித்தராமையா கோட்டை ஆஞ்சநேயர் கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்தார். பின்னர் போலீசார் காங்கிரசார் மீது நடத்திய தடியடி சம்பவம் குறித்து சித்தராமையா தொண்டர்களிடம் கேட்டு அறிந்து கொண்டார். இதற்கிடையே சித்தராமையாவை எதிர்த்து ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் களம் இறங்கும் ஜி.டி.தேவே கவுடா சாமராஜ உடையார் சர்க்கிள் பகுதிக்கு வந்தார்.

பின்னர் அவர் ஜனதா தளம்(எஸ்) தொண்டர்களுடன் மைசூரு நஜர்பாத்தில் உள்ள மினி விதானசவுதா அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார்.

இதுபற்றி அறிந்த சித்தராமையா, தொண்டர்களிடம் யாரும் தேர்தல் அலுவலகத்திற்கு வரவேண்டாம் என்று கூறிவிட்டு தன்னுடன் 5 பேரை மட்டும் அழைத்துக்கொண்டு காரில் தேர்தல் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு சித்தராமையா சென்றபோது, ஜி.டி.தேவேகவுடா தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்து கொண்டிருந்தார்.

அதைப்பார்த்த சித்தராமையா தேர்தல் அலுவலகத்தில் உள்ள பார்வையாளர்கள் அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். இதற்கிடையே காங்கிரஸ் தொண்டர்கள் கோட்டை ஆஞ்சநேயர் கோவில் அருகில் இருந்து ஊர்வலமாக தேர்தல் அலுவலகத்திற்கு வந்துவிட்டனர். போலீசார் தடுப்புகளை அமைத்திருந்தபோதும், அவற்றை உடைத்துக்கொண்டு காங்கிரசார் ஊர்வலமாக வந்து மினிவிதானசவுதாவின் தெற்கு வாசல் பகுதியில் குவிந்திருந்தனர். மேலும் அவர்கள் சித்தராமையாவுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர்.

இதற்கிடையே ஜி.டி.தேவேகவுடாவுடன் வந்திருந்த ஜனதா தளம்(எஸ்) கட்சி தொண்டர்கள் மினிவிதானசவுதாவின் வடக்கு வாசல் பகுதியில் இருந்து எதிர் கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஜி.டி.தேவேகவுடா வேட்புமனு தாக்கல் செய்துவிட்டு தேர்தல் அலுவலகத்தில் இருந்து சென்றார். அவர் சென்ற பின்னர் சித்தராமையா தேர்தல் அலுவலகத்திற்கு சென்று, தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். இதையடுத்து அவர் தனது கார் நிறுத்தப்பட்டிருந்த மினிவிதான சவுதாவின் தெற்கு வாசல் பகுதிக்கு வந்தார்.

அந்த சந்தர்ப்பத்தில் ஜனதா தளம்(எஸ்) மற்றும் காங்கிரசார் மீண்டும் வார்த்தைப் போரில் ஈடுபட்டு கோஷம் போட்டுக் கொண்டிருந்தனர். இதனால் அங்கு மீண்டும் பதற்றம் தொற்றிக்கொண்டது.

இதையடுத்து போலீசார் ஜி.டி.தேவேகவுடாவையும், ஜனதா தளம்(எஸ்) கட்சியினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து காங்கிரசார் சித்தராமையாவை திறந்த வேனில் நின்றபடி ஊர்வலமாக மைசூரு ராமகிருஷ்ணா நகரில் உள்ள அவருடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் நேற்று மைசூருவில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியது.

அதே போல் ஜனதா தளம்(எஸ்) கட்சி மாநில தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி ராமநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று ராமநகரில் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடைய மனைவி அனிதா குமாரசாமி உடன் இருந்தார்.

நீர்ப்பாசனத்துறை மந்திரி எம்.பி.பட்டீல் பபலேஸ்வரா தொகுதியில் நேற்று மனு தாக்கல் செய்தார். காங்கிரஸ் சார்பில் பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் போலீஸ் மந்திரி ராமலிங்கரெட்டியின் மகள் சவுமியா ரெட்டி, தொழில்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே ஹலியால் தொகுதியிலும், பெங்களூரு கோவிந்தராஜ்நகர் தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி வி.சோமண்ணாவும் மனு தாக்கல் செய்தனர்.

பெங்களூரு பத்மநாபநகர் தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் துணை முதல்-மந்திரி ஆர்.அசோக்கை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் குருப்பநாயுடு, சிக்பேட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் உதய் கருடாச்சார் ஆகியோரும் மனு தாக்கல் செய்தனர். மகாதேவபுரா தொகுதியில் பா.ஜனதா சார்பில் முன்னாள் மந்திரி அரவிந்த் லிம்பாவளி மனு தாக்கல் செய்தார்.

பா.ஜனதா சார்பில் பொம்மனஹள்ளி தொகுதியில் சதீஸ்ரெட்டி எம்.எல்.ஏ., சிக்கமகளூரு தொகுதியில் சி.டி.ரவி, முத்தோலில் முன்னாள் மந்திரி கோவிந்த் கார்ஜோள், ஒசக்கோட்டையில் முன்னாள் மந்திரி பச்சேகவுடா மகன் சரத் பச்சேகவுடா, சாகரில் ஹாலப்பா, சொரப் தொகுதியில் குமார் பங்காரப்பா, தீர்த்தஹள்ளியில் அரகஞானேந்திரா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் மண்டியா நாகமங்களா தொகுதியில் செலுவராயசாமி, பெங்களூரு சி.வி.ராமன்நகர் தொகுதியில் மேயர் சம்பத்ராஜ் ஆகியோர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அதேப் போல் வருணா தொகுதியில் சித்தராமையா மகன் யதீந்திரா நேற்று வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

நேற்று ஒரே நாளில் மட்டும் சட்டசபை தேர்தலையொட்டி 553 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனு தாக்கல் தொடங்கிய 17-ந்தேதி முதல் நேற்று வரை மொத்தம் 708 வேட்பு மனுக்கள் தாக்கல் ஆகியுள்ளது என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார். 

Next Story