உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக கர்நாடகத்தில் இதுவரை ரூ.33.20 கோடி பறிமுதல்


உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக கர்நாடகத்தில் இதுவரை ரூ.33.20 கோடி பறிமுதல்
x
தினத்தந்தி 22 April 2018 4:19 AM IST (Updated: 22 April 2018 4:19 AM IST)
t-max-icont-min-icon

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வரப்பட்டதாக கர்நாடகத்தில் இதுவரை ரூ.33.20 கோடி பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சஞ்சீவ்குமார் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கவும், நடத்தை விதிமுறைகளை மீறுபவர்களை பிடிக்கவும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், போலீசார் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். அதன்படி, நேற்று காலையுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் உரிய ஆவணங்கள் இல்லாமல் வாகனங்களில் எடுத்து சென்ற ரூ.65½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த நாள் முதல் இதுவரை மாநிலம் முழுவதும் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்டதாக ரூ.33 கோடியே 20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

கடந்த 24 மணிநேரத்தில் 201 கிராம் தங்க நகைகள் சிக்கியுள்ளன. ஒட்டு மொத்தமாக இதுவரை 7 கிலோ 704 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதுபோல தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 87 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 93 லட்சம் ஆகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 84 பேர் தங்களது துப்பாக்கிகளை ஒப்படைத்து உள்ளனர். கலால்துறையினர் இதுவரை ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான மதுபானங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Next Story