உடன்குடியில் பரபரப்பு: வாகன பிரசாரம் செய்த வைகோ மீது கல்வீச்சு


உடன்குடியில் பரபரப்பு: வாகன பிரசாரம் செய்த வைகோ மீது கல்வீச்சு
x
தினத்தந்தி 22 April 2018 5:05 AM IST (Updated: 22 April 2018 5:05 AM IST)
t-max-icont-min-icon

வாகன பிரசாரம் செய்த வைகோ மீது கல்வீசப்பட்டதால், போலீஸ் தடியடி நடத்தினர்.

உடன்குடி,

உடன்குடியில் வாகன பிரசார செய்த வைகோவுக்கு பா.ஜ.க.வினர் கருப்பு கொடி காட்டினர். அப்போது வைகோ மீது கல்வீசப்பட்டதால், போலீஸ் தடியடி நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று மாலையில் செய்துங்கநல்லூரில் இருந்து வாகன பிரசார பயணத்தை தொடங்கினார். அவர் இரவு 9.45 மணி அளவில் உடன்குடி சந்தையடி தெரு வழியாக பிரசார வேனில் நின்றவாறு வந்தார். அப்போது அங்கு பா.ஜ.க. மாவட்ட செயலாளர் சிவமுருகன் ஆதித்தன், ஒன்றிய செயலாளர் திருநாகரன் தலைமையில் பா.ஜ.க.வினர் கருப்பு கொடி ஏந்தி நின்றனர். அவர்கள் திடீரென்று வைகோவின் பிரசார வாகனம் முன்பு நின்று, ‘வைகோ ஒழிக‘ என்று கோஷமிட்டனர். அப்போது வைகோவின் பிரசார வேனின் மீது சரமாரியாக கல் வீசப்பட்டது. உடனே வைகோ பிரசார வேனுக்குள் அமர்ந்தார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தீபு தலைமையிலான போலீசார் தடியடி நடத்தினர். இதனால் அங்கிருந்த பா.ஜ.க.வினர் உள்ளிட்ட அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

பின்னர் சிறிதுநேரம் கழித்து வைகோ வேனில் நின்றவாறு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இங்கு பா.ஜ.க. வினர் கருப்பு கொடி காட்ட தயராக உள்ளதாக எனக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வேலையை அவர்கள் செய்யட்டும், நாம் அமைதியாக செல்வோம் என்று கூறி வந்தேன். அவர்கள் கருப்பு கொடி காட்டி விட்டு சென்று இருக்கலாம். என் மீது கல் வீசி தாக்கி உள்ளனர். (அப்போது வைகோ தனது கையில் வைத்திருந்த 5 கற்களை காண்பித்தார்). நான் இங்கு ஓட்டு கேட்டு வரவில்லை. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று வலியுறுத்தி பிரசார பயணம் மேற்கொண்டு உள்ளேன்.

அப்படியெனில் பா.ஜ.க.வினர் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்கிறீர்களா? பா.ஜ.க.வின் கூட்டத்தில் புகுந்த புல்லுருவிகள் என் மீது கல் வீசினர். இதற்கு நான் பயந்து போக மாட்டேன். ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று பள்ளிவாசல், தேவாலயங்கள், கோவில்களில் மக்கள் ஒற்றுமையுடன் வழிபட்டு, போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நான் ம.தி.மு.க.வை தொடங்கி 25 ஆண்டுகளுக்கு மேலாகியும் என் மீது எந்த கட்சியினரும் கல்வீசியது கிடையாது. எங்களுடைய கட்சி தொண்டர்களும் எந்த வன்முறையிலும் ஈடுபட்டது கிடையாது. பா.ஜ.க.வினரின் கல்வீச்சில் ம.தி.மு.க. மாநில தொண்டர் அணி அமைப்பாளர் பாஸ்கர சேதுபதி, சங்கொலி சந்திரன், மரியசெல்வம் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்களை ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். நான் திட்டமிட்டபடி உடன்குடி பஜாரில் பேசி விட்டு செல்வேன் இவ்வாறு வைகோ பேசினார். பின்னர் அவர் உடன்குடி பஜாரில் திறந்த வேனில் நின்றபடி பேசினார்.

Next Story