கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் திருடிய 2 மாணவர்கள் கைது


கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் திருடிய 2 மாணவர்கள் கைது
x
தினத்தந்தி 23 April 2018 3:45 AM IST (Updated: 22 April 2018 11:18 PM IST)
t-max-icont-min-icon

கன்னியாகுமரி அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் உண்டியல் பணம் திருடிய 2 மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி,

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் ஒரு சி.எஸ்.ஐ. ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று காலையில் இரண்டு சிறுவர்கள் ஆலயத்துக்குள் புகுந்து அங்கிருந்த உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிக்கொண்டிருந்தனர். அப்போது, ஆலய நிர்வாகி ஒருவர் அங்கு வந்தார். அவரை கண்டதும் 2 சிறுவர்களும் தப்பி ஓடினார்கள்.

உடனே, ஆலய நிர்வாகி கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் நின்றவர்கள் திரண்டு 2 சிறுவர்களையும் விரட்டி பிடித்து, கன்னியாகுமரி  போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

கைது

போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த 2 சிறுவர்களும் அந்த பகுதியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்கள் என்பதும், கிறிஸ்தவ ஆலயத்துக்குள் புகுந்து உண்டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடியதும் தெரிய வந்தது.

மேலும், அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 700–ஐ போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து 2 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

மற்றொரு சம்பவம்

தென்தாமரைகுளம்  அருகே மேலசந்தையடியில் ஒரு கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. சம்பவத்தன்று காலையில் ஆலயத்துக்கு சென்றவர்கள் அங்கு உண்டியல் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தென்தாமரைகுளம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கொட்டாரம் ஆலயத்தில் உண்டியல் பணத்தை திருடிய சிறுவர்களுக்கு இந்த திருட்டிலும் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story