அனுமதியின்றி செயல்பட்ட 2 பார்களுக்கு ‘சீல்’ மதுபாட்டில்கள் பறிமுதல்


அனுமதியின்றி செயல்பட்ட 2 பார்களுக்கு ‘சீல்’ மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 1:35 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி செயல்பட்ட 2 பார்களுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டன. மேலும் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரில் அனுமதியின்றி பார்கள் நடத்தப்படுவதாகவும், அங்கு கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும், இதேபோல பெட்டி கடைகளில் வைத்து கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாகவும் புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சவுந்தரபாண்டியன், டாஸ்மாக் தாசில்தார் சார்லஸ், கோட்ட கலால் அலுவலர் மனோகரன், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரமணி மற்றும் போலீசார் புதுக்கோட்டை நகரில் உள்ள புதிய பஸ் நிலையம், உழவர் சந்தை சாலை, பழனியப்பா கார்னர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் பார்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பார்களில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 510 மதுபாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 600-ஐயும் அதிகாரிகள் பறி முதல் செய்தனர். புதுக்கோட்டை உழவர்சந்தை, புதிய பஸ்நிலையம் ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 2 பார்களுக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

பார்களில் மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த ஆலங்குடி பகுதியை சேர்ந்த சூசைராஜ், புதுக்கோட்டை மேல 2-ம் வீதியை சேர்ந்த செந்தில், திருவரங்குளம் அருகே உள்ள வேப்பங்குடியை சேர்ந்த வைத்தியலிங்கம், திருவரங்குளம் பகுதியை சேர்ந்த சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரையும் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.

இதேபோல பெட்டிக்கடையில் வைத்து மது விற்பனை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டம் அலையப்பட்டி வெல்லக்கொல்லை பகுதியை சேர்ந்த ராஜேசேகர் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 15 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். கலால் உதவி ஆணையர் கார்த்திக்கேயன், புதுக்கோட்டை ராஜகோபாலபுரத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையத்திற்கு வந்து பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களை பார்வையிட்டார். தொடர்ந்து கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் விசாரணை நடத்தினார். 

Next Story