பஸ் நிலையத்தில் வெப்பஅலை அவசர கால உதவி மையம் அமைக்கப்படும் கலெக்டர் தகவல்


பஸ் நிலையத்தில் வெப்பஅலை அவசர கால உதவி மையம் அமைக்கப்படும் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 April 2018 4:00 AM IST (Updated: 25 April 2018 1:38 AM IST)
t-max-icont-min-icon

கரூர் பஸ் நிலையத்தில் வெப்ப அலை அவசர கால உதவி மையம் அமைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் தெரிவித்தார்.

கரூர்,

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோடை காலத்தில் ஏற்படும் வெப்ப அலையிலிருந்து பொதுமக்கள் தங்களை காத்துக்கொள்வதற்கான ஆலோசனைக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

வெப்ப அலை என்பது வழக்கமான வெப்பத்தை விட 3 டிகிரி கூடுதலாக தொடர்ந்து 3 நாட்களுக்கு நிலவுவதே வெப்ப அலை எனப்படும். இந்த வெப்ப அலையால் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உயிர் அபாய நிலை கூட ஏற்படலாம். இதனை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. அன்றாட தட்பவெப்பநிலை அறிய செய்தித்தாள், தொலைக்காட்சி செய்தி மற்றும் வானொலி செய்திகளை தவறாமல் கேட்க வேண்டும்.

வெயில் தாக்கம்

தாகம் எடுக்கவில்லை என்றாலும் அடிக்கடி போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும். எடை குறைவான, இறுக்கமில்லாத, கதர் ஆடைகளை அணிவது, கண்களுக்கு கூலிங்கிளாஸ் மற்றும் வெயிலில் செல்லும்போது குடை பயன்படுத்துதல் மற்றும் காலணிகளை அணிந்து செல்ல வேண்டும். வெளியில் பயணம் செல்லும் போது கண்டிப்பாக தண்ணீர் எடுத்து செல்ல வேண்டும். வெப்பத்தினால் ஏற்படக்கூடிய தலைவலி, வலிப்பு, அரிப்பு, பக்கவாதம், தலைசுற்றல், குமட்டல் மற்றும் அதிக வியர்வை போன்ற பாதிப்புகள் ஏற்படின் உடன் மருத்துவரை அணுக வேண்டும். வீட்டிலுள்ள கால்நடைகளை நிழலான இடத்தில் பராமரித்து அவைகளுக்கு தேவையான தண்ணீர் அடிக்கடி கொடுக்கப்பட வேண்டும். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நேரங்களில் கடுமையான வேலைகள் செய்வதை தவிர்க்க வேண்டும். மது அருந்துவது, டீ, காபி அருந்துவதை தவிர்ப்பது நல்லது.

தொலைபேசி எண்

இது உடம்பிலுள்ள நீர் சத்தை குறைக்கும். புரதச்சத்து அதிகமாக உள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். வெப்பச்சலனம் குறித்த தகவல்களை பொதுமக்கள் தெரிவித்திட ஏதுவாக மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1077 கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கரூர் பஸ்நிலையத்தில் வெப்பஅலை அவசர கால உதவி மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். 

Next Story