நாட்டறம்பள்ளியில் ஆசிரியர் வெட்டி கொலை 5 பேரை பிடித்து விசாரணை


நாட்டறம்பள்ளியில் ஆசிரியர் வெட்டி கொலை 5 பேரை பிடித்து விசாரணை
x
தினத்தந்தி 1 May 2018 4:30 AM IST (Updated: 1 May 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

நாட்டறம்பள்ளியில் ஆசிரியர் வெட்டி கொலையில் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாட்டறம்பள்ளி,

நாட்டறம்பள்ளியில் ஆசிரியர் வெட்டி கொலை செய்யப்பட்டார். 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வேலூர் மாவட்டம், நாட்டறம்பள்ளியில் உள்ள தாயப்ப தெருவை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி மனோன்மணி. இருவரும் தலைமை ஆசிரியர்களாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள். இவர்களது மகன் சதீஷ்குமார் (வயது 32). இவருக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சதீஷ்குமார் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமாரின் மனைவி, அவரை பிரிந்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில் கடந்த மாதம் பள்ளி நிர்வாகம், சதீஷ்குமாரை பள்ளியில் இருந்து நீக்கியது. நீக்கம் செய்யப்பட்ட பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஒருவரை திருமணம் செய்து கொள்ள சதீஷ்குமார் விரும்பினார். ஆனால் அந்த மாணவியின் பெற்றோர், ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதால் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்தனர். இருப்பினும் அந்த மாணவியை சதீஷ்குமார் செல்போனில் தொடர்பு கொண்டு தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

நேற்று முன்தினம் நாட்டறம்பள்ளியில் சாமுண்டீஸ்வரி அம்மன் திருவிழா நடந்தது. அதைத் தொடர்ந்து ஏரிகோடி பகுதியில் நடந்த இன்னிசை கச்சேரியை சதீஷ்குமார் நண்பர்களுடன் மது அருந்திவிட்டு கண்டு களித்தார். இரவு 11 மணி அளவில் அங்கிருந்து சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தனியாக வீட்டிற்கு புறப்பட்டார்.

புறவழிச்சாலை வழியாக வந்தபோது, 5 பேர் கொண்ட கும்பல் திடீரென சதீஷ்குமாரை வழி மறித்தனர். பின்னர் சதீஷ்குமாரிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனையடுத்து அந்த கும்பல் அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்களால் சதீஷ்குமாரின் தலை, கை, காலில் சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் நாட்டறம்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story