பசுமை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு


பசுமை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 2 May 2018 11:30 PM GMT (Updated: 2 May 2018 8:43 PM GMT)

பசுமை தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாடுகளுடன் வந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பனமரத்துப்பட்டி, 

சேலத்தில் இருந்து சென்னைக்கு மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை ஆணையம் சார்பில் புதியதாக பசுமை தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட உள்ளது. தற்போது இதற்கான நில அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதாக கூறி இந்த திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

8 வழிச்சாலையாக அமைய உள்ள இந்த பசுமை தேசிய நெடுஞ்சாலை சேலம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 40 கி.மீ. பயணிக்கிறது. இதில் பனமரத்துப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட நிலவாரப்பட்டி, நாழிக்கல்பட்டி, பாரப்பட்டி ஆகிய ஊராட்சிகள் வழியாக இந்த சாலை செல்கிறது.

இந்தநிலையில் நிலவாரப்பட்டி ஊராட்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் விவசாயிகளும், பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுத்தனர். மேலும் இதனை கிராமசபை கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்றி தருமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதிகாரிகள் இதனை தீர்மானமாக நிறைவேற்ற இயலாது என கூறியதையடுத்து பொதுமக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டனர்.

நேற்று இரண்டாவது நாளாக நிலவாரப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகளும், பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடுகளுடன் கிராமசபை கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்தனர். அவர்கள் அங்கு மாடுகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பசுமை தேசிய நெடுஞ்சாலை திட்டத்தினால் இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டு விடும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். விவசாய நிலங்களை அழிப்பதால் விவசாயிகள் மட்டுமல்லாது கால்நடைகளும் பாதிக்கப்படும். இதனை உணர்த்தும் வகையில் நாங்கள் மாடுகளை அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். பசுமை என்ற பெயரில் விவசாய நிலங்களையும், வனப்பகுதிகளையும் அழிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதை அரசுக்கு உணர்த்தவே இவ்வாறு கால்நடைகளை அழைத்து வந்தோம். நாங்கள் கிராமசபை கூட்டத்தில் அளித்த மனுவை தீர்மானமாக நிறைவேற்றும் வரை தொடர்ந்து போராட்டம் நடத்துவோம், என்றார்.

இதையடுத்து அங்கு வந்த கிராம நிர்வாக அலுவலர் மைதிலி பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், உங்கள் கோரிக்கையை மனுவாக எழுதி கொடுங்கள். நாங்கள் அதனை மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம், என்றனர்.

இதையடுத்து பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்ப்பது குறித்து கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என மனுவாக எழுதி கொடுத்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story