சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 3 May 2018 4:00 AM IST (Updated: 3 May 2018 2:59 AM IST)
t-max-icont-min-icon

சேமங்கி மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

நொய்யல்,

நொய்யலை அடுத்த சேமங்கியில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் நடைபெற்றது. தேர்த்திருவிழாவை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் 15-ந் தேதி இரவு 11 மணிக்கு மேல் மாரியம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 20-ந் தேதி காலை 6 மணிக்கு மேல் பூவோட்டிற்கு தர்மகர்த்தா வெற்றிலை பாக்கு கொடுத்தல் நிகழ்ச்சியும், கடந்த 23-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் பூவோடு வைத்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. கடந்த 29-ந் தேதி இரவு 10 மணிக்கு மேல் மாரியம்மன், செல்லாண்டியம்மன் ஆற்றிற்கு செல்லுதல், இரவு 10.30 மணிக்கு மேல் ஆயக்கால் போடுதல் ஆகியவை நடைபெற்றது. நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மேல் அம்மன் தேரில் ரதம் ஏறுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு மேல் பெண்கள் பொங்கல் வைத்தல், மாவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு மேல் சாத பூஜை மற்றும் கம்பத்தான் பூஜையும் நடைபெற்றது.

தேரோட்டம்

இரவு 11 மணிக்கு மேல் வடகாணிக்கை மற்றும் பூர்விக தானம் கொடுக்கப்பட்டது. இரவு 12 மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் அதன் நிலையை அடைந்தது. நேற்று முப்பாடு பண்டாரம் காப்பு அவிழ்ப்பு, கம்பம், கும்பம் காவிரி ஆற்றுக்கு சென்று நீராடி வருதல், தர்மகர்த்தாவை வீட்டிற்கு அழைத்து செல்லுதல், இரவு அம்மன் ஊஞ்சல் ஆட்டுதல் ஆகியவை நடைபெற்றன. இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு மேல் காப்பு அவிழ்த்தல், மாலை 4.30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டுடன் செல்லாண்டியம்மன், மாரியம்மன் விடைபெற்று நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலுக்கு செல்லுதல் நடைபெறுகிறது. 

Next Story