திருப்பூர் 15-வது வார்டில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடம் மீட்பு


திருப்பூர் 15-வது வார்டில் ஆக்கிரமிப்பில் இருந்த மாநகராட்சி இடம் மீட்பு
x
தினத்தந்தி 3 May 2018 4:30 AM IST (Updated: 3 May 2018 3:28 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் 15-வது வார்டில் தனியார் ஆக்கிரமிப்பில்இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான இடம் மீட்கப்பட்டது.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் மாநகராட்சி 15-வது வார்டுக்குட்பட்ட ஜவஹர்நகரில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். அவருடைய வீட்டிற்கு எதிரே அவருக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த வீட்டிற்கும் எதிரே உள்ள இடத்திற்கும் நடுவே மாநகராட்சிக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தில் 3 வீடுகள் மட்டுமே உள்ளது. இதனால் அந்த இடத்தை செல்வராஜ் மட்டுமே பயன்படுத்தி வந்தார். மேலும் அந்த இடத்தில் சிமெண்டு சாலை அமைத்து பராமரித்து வந்த அவர் அங்கு மரங்களையும் வளர்த்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த இடத்தில் அவர் கூடாரம் அமைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை செல்வராஜ் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக ஜவஹர்நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மனு கொடுத்தனர்.

இந்த நிலையில் நேற்றுகாலை மாநகராட்சி 1-வது மண்டல உதவி பொறியாளர் சுப்பிரமணியம் தலைமையில் ஊழியர்கள் பொக்லைன் எந்திரத்துடன் அங்கு சென்றனர். மேலும் ஜவஹர்நகர் குடியிருப்போர் நல சங்க தலைவர் சீனிவாசன், செயலாளர் திருவேங்கடம், துணைத்தலைவர் வேலாயுதம் மற்றும் நிர்வாகிகளும் சம்பந்தப்பட்ட இடத்தில் திரண்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்வராஜ் வீட்டு முன்பு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமெண்டு சாலை பொக்லைன் எந்திரம் கொண்டு இடித்து அகற்றப்பட்டது. மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த அவருக்கு சொந்தமான பொருட்களையும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கிருந்து அகற்றினார்கள்.

Next Story