பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்


பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
x
தினத்தந்தி 2 May 2018 11:36 PM GMT (Updated: 2 May 2018 11:36 PM GMT)

பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார்.

பெங்களூரு,

பா.ஜனதா நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல் நடத்தினார். பிரச்சினைகளை தீர்ப்பதாக விவசாயிகளிடம் எடுத்துக்கூற வேண்டும் என்று அவர் பா.ஜனதாவினருக்கு அறிவுரை வழங்கினார்.

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். அவர் ஒருநாள் விட்டு ஒருநாள் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்த நிலையில் நேற்று நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி செல்போன் செயலி மூலம் கர்நாடக பா.ஜனதா விவசாய அணி நிர்வாகிகளுடன் பெங்களூரு மல்லேசுவரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது மோடி பேசியதாவது:-

வேளாண்மை மற்றும் விவசாயிகளுக்கு பா.ஜனதா முன்னுரிமை அளித்து வருகிறது. இது பா.ஜனதாவின் மரபாக உள்ளது. இது பா.ஜனதாவின் இயற்கை குணம். இது பா.ஜனதாவின் சிந்தனை. பிரதம மந்திரி பசல் பீமா காப்பீட்டு திட்டம் குறித்து கர்நாடகத்தில் இருந்து எனக்கு நிறைய புகார்கள் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நமது கட்சியின் எம்.பி.க்களில் ஒருவர் விவசாய அணி தொண்டர்களின் உதவியுடன் மிக சிறப்பான முறையில் பணியாற்றி இருக்கிறார்.

இந்த பசல் பீமா காப்பீட்டு திட்டத்தின் பயன்கள் கர்நாடக விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. இதுபற்றி கர்நாடக அரசு கவலைப்படவில்லை. இது ஒரு வித்தியாசமான அரசு. வறட்சியின்போது மாநில அரசு இன்னும் சிறப்பான முறையில் செயல்பட்டு இருந்தால் விவசாயிகள் பயன் அடைந்து இருப்பார்கள். ஆனால் மாநில அரசு அந்த பணியை செய்யவில்லை.

விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்கும் அரசு கர்நாடகத்தில் அமைய வேண்டும் என்று நீங்கள்(தொண்டர்கள்) விவசாயிகளிடம் உண்மையை எடுத்துக்கூற வேண்டும். கர்நாடகத்தில் விவசாயிகளின் நலனில் அக்கறையுள்ள அரசு அமைந்தால், அதனால் நீங்கள் பயன் பெறுவீர்கள் என்று விவசாயிகளிடம் நீங்கள் எடுத்து சொல்ல வேண்டும்.

விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்துவது தான் பா.ஜனதாவின் தலையாய பொறுப்பு ஆகும். மத்திய பட்ஜெட்டை ஊடகங்கள் விவசாயிகள் பட்ஜெட், கிராமப்புற இந்தியாவுக்கான பட்ஜெட் என்று வர்ணித்துள்ளது. இதை விவசாயிகளிடம் தெரிவிக்க வேண்டும். நமது முதல்-மந்திரி வேட்பாளர் எடியூரப்பா விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். கஷ்டத்தில் உள்ள விவசாயிகளுக்கு உதவுவதற்கு பதிலாக ஏரிகளை கட்டுமான தொழில் அதிபர்களுக்கு சித்தராமையா அரசு தாரைவார்த்துள்ளது.

விவசாயிகளுக்கு உதவி செய்வது என்பது நமக்கு கிடைத்த பாக்கியமாக கருத வேண்டும். விவசாயிகளின் பெயரில், காங்கிரஸ் அரசியல் செய்கிறது. விவசாயிகளிடம் தவறான பிரசாரம் செய்து வரும் காங்கிரஸ் குறித்து உண்மையை எடுத்து சொல்லும் பணியை நீங்கள் செய்ய வேண்டும். விவசாயிகளை மேம்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.

எடியூரப்பாவை பற்றி கர்நாடக மக்கள் நன்றாக அறிவார்கள். மத்திய அரசும், கர்நாடகத்தில் ஆட்சிக்கு வரும் பா.ஜனதா அரசும் இணைந்து விவசாயிகளின் நலனுக்காக இணைந்து பணியாற்றும். நிலம், நீரை பாதுகாப்பதில் இருந்து தரமான விதைகள் வழங்குதல், மின்சாரம் விநியோகம் செய்வது வரை அனைத்து பணிகளையும் மத்திய அரசு மிகுந்த கவனத்துடன் மேற்கொண்டு வருகிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் கிராமங்கள் மற்றும் விவசாயிகளின் பங்கு முக்கியமானது. விவசாயத்தை லாபகரமான தொழிலாக மாற்றவும், விவசாயம் பக்கம் இளைஞர்களை ஈர்க்கவும் பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரிக்கும் என்று விவசாயிகளிடம் நீங்கள் நம்பிக்கையுடன் எடுத்துக்கூற வேண்டும். பசுமை புரட்சி, வெண்மை புரட்சி வரிசையில், நீல புரட்சி(மீன் தொழில்), இனிப்பு புரட்சி(தேன்), சூரியசக்தி மற்றும் இயற்கை விவசாய புரட்சியை ஏற்படுத்தும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் அதிகரிக்கும். இவ்வாறு மோடி பேசினார்.

அதே போல் அடுத்து வரும் நாட்களில் மகளிர் அணி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அணி, இளைஞர் அணி உள்பட பல்வேறு அணி நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் நடத்த மோடி முடிவு செய்துள்ளார். கர்நாடக பா.ஜனதா தலைவர் எடியூரப்பா போட்டியிடும் சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தொகுதியில் உள்ள விவசாயி சாந்தப்பா கூறுகையில், “5 ஏக்கரில் சோளம் பயிரிட்டுள்ளேன். இதற்காக எங்கள் குடும்பத்தினர் நிறைய உழைப்பை கொடுத்துள்ளோம். ஆனால் இதில் நாங்கள் செய்த செலவு கூட கிடைக்காது போல் தெரிகிறது. வழக்கமாக இங்கு விவசாயிகள் நெல் தான் பயிரிடுவார்கள். ஆனால் தண்ணீர் பற்றாக்குறையால் நாங்கள் சோளத்திற்கு மாறிவிட்டோம்“ என்றார்.

இன்னொரு விவசாயி கணேஷ் கூடஹள்ளி என்பவர் கூறும்போது, “குறைந்தபட்ச ஆதரவு விலையுடன் எங்களின் விளைபொருட்களை கொள்முதல் செய்ய மையங்களை மாநில அரசு திறக்கவில்லை. சோளத்திற்கு குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1,500 ஆதரவு விலை வழங்குவதாக எங்கள் தலைவர் எடியூரப்பா வாக்குறுதி அளித்துள்ளார். மத்திய அரசு ஆதரவு விலை ரூ.1,425 வழங்குவதாக அறிவித்தது. ஆனால் அது எங்களுக்கு கிடைக்கவில்லை. உண்மையிலேயே நாங்கள் யாரை குறை சொல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை“ என்றார்.

அதைத்தொடர்ந்து பேச்சை ஆரம்பித்த இன்னொரு விவசாயி சுரேஷ்குமார், “எங்கள் பகுதியில் பதப்படுத்தும் மையம் இல்லை. தண்ணீர் பற்றாக்குறையால் நெல் சாகுபடியை நிறுத்திவிட்டோம். ஏதோ வாழ்க்கையை நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற நோக்கத்தில் சோளம் சாகுபடி செய்வதை தொடங்கினோம். விவசாயிகளின் பெயரில் அரசியல் செய்கிறார்கள். நோட்டாவுக்கு ஓட்டுப்போடலாமா? என்று நான் ஆலோசித்து வருகிறேன்“ என்றார்

Next Story