‘நீட்’ தேர்வுக்கு எதிராக மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


‘நீட்’ தேர்வுக்கு எதிராக  மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 May 2018 5:00 AM IST (Updated: 4 May 2018 12:20 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு-புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் பாரதிராஜா, சீமான், கவுதமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலூர்,

‘நீட்’ தேர்வுக்கு எதிராகவும், காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வேண்டும். ஸ்டெர்லைட், நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பெட்ரோலிய மண்டலம், ஒட்டு மொத்த மீனவர்களை அழிக்கும் சாகர்மாலா என மக்களை பாதிக்கும் அனைத்து திட்டங்களையும் திரும்ப பெற வலியுறுத்தி கடலூரில் இருந்து சென்னை நோக்கி மோட்டார் சைக்கிள் பேரணி நடத்த தமிழ்நாடு -புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பினர் போலீசாரிடம் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். இந்நிலையில் ஆர்ப்பாட்டத்துக்கு மட்டும் நேற்று முன்தினம் போலீசார் அனுமதித்தனர். இதையடுத்து நேற்று காலை கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் ‘நீட்’ தேர்வு எதிராகவும், பல்வேறு அழிவு திட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு திரைப்பட இயக்குனரும், புதுச்சேரி-தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கவுதமன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் இயக்குனர்கள் பாரதிராஜா, பேரரசு, வெற்றிமாறன், வேலுபிரபாகரன், சேகர், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கருணாஸ் எம்.எல்.ஏ., இந்திய கம்யூனிஸ்டு கட்சி மகேந்திரன், தமிழ் தேசிய பேரியக்க தலைவர் மணியரசன், மீத்தேன் திட்ட எதிர்ப்பு இயக்கம் ஜெயராமன், சமூக நீதிக்கான மருத்துவர்கள் சங்கம் ரவீந்திரநாத், கடலூர் மாவட்ட உழவர் மன்ற தலைவர் கார்மாங்குடி வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

இதில் தமிழ்நாடு- புதுச்சேரி தமிழர் உரிமைக்கான மாணவர்கள், இளைஞர்கள் கூட்டமைப்பினர், தமிழ் அமைப்பினர், விவசாயிகள், மீனவ அமைப்பினர் திரளாக கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ‘நீட்’ வேண்டாம், நீர் வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வேண்டும். நியூட்ரினோ போன்ற அழிவு திட்டங்களை கைவிட வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று மக்கள் போராடி வருகிறார்கள். 3-ந்தேதி இந்த பிரச்சினைக்கு கதவு திறக்கும் என்று எதிர்பார்த்தால், கதவை மூடி வைத்து விட்டார் கள். சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கால அவகாசம் கேட்கிறது. எப்படி என்றால் கர்நாடக தேர்தல் களத்தில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்கள் பணியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி அவகாசம் கேட்கிறது.

கடும் வெயிலில் பயிர்கள் காய்ந்து, தமிழக டெல்டா மாவட்டங்கள் பற்றி எரியும் போது, விவசாயிகள் திக்கு முக்காடிக்கொண்டிருக்கும் போது, மத்திய அரசு களப்பணிக்காக, அதிகாரத்தை பாதுகாக்க கர்நாடக மாநிலத்தில் போராடுகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது.

தமிழகத்தின் மீது உண்மையான பற்று இருந்திருந்தால், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறிய உடனே மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைத்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி செய்யவில்லை. இன்று தமிழர்கள் விழித்துக்கொண்டார்கள். தமிழக மக்களுக்கு, மண்ணுக்காக நல்ல கலைஞனாக கள போராளியாகவும் இருப்பேன். அரசியல்வாதியாக மாற மாட்டேன். தமிழ்மண்ணுக்கு எதிராக சிறு கீறல் விழுந்தாலும், அவர்களை தூக்கி எறிய வேண்டும். எங்களுக்கு ஒரு தேசம் தமிழகம், ஒரு மொழி தமிழ்மொழி போதும். இதை நீங்கள் தான் சொல்லிக்கொடுத்து இருக்கிறீர்கள்.

தமிழகத்தில் யார் வேண்டுமானலும் வரலாம், அரசியல் செய்யலாம், ஆனால் தலைமை பதவிக்கு வரக்கூடாது. தமிழன் மட்டும் தான் தமிழகத்துக்கு தலைவராக முடியும். இந்த போராட்டம் மூலம் தீக்குச்சி, தீப்பந்தம் ஆகி இருக்கிறது. இந்த தீப்பந்தம் சுட்டெரிக்கும். குப்பைகளை எரித்து தமிழகத்தை சுத்தப்படுத்தும். இன்றைய காலக்கட்டத்துக்கு சீமான் தேவை. தமிழர்கள் வன்முறையில் இறங்கக்கூடாது.

சீமைக்கருவேல மரங்கள், பார்த்தீய செடிகள் நிலத்தடி தண்ணீரை உறிஞ்சுவதுபோல் கனிம வளங்களை மத்திய அரசு சுரண்டி வருகிறது. தேசிய கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மாநில கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

கர்நாடகாவிலும் தேசிய கட்சிகளை அந்த மக்கள் புறக்கணிக்க வேண்டும். அப்போது தான் காவிரி மேலாண்மை வாரியம் போன்ற பிரச்சினைகளை நாமே பேசி தீர்த்துக்கொள்ள முடியும். பிரச்சினைகளுக்கு விடிவு காலம் பிறக்கும்.

முன்னதாக பாரதிராஜா அளித்த பேட்டியில், மத்திய அரசை பொறுத்தவரை ‘ஸ்கீம்’ என்பது கர்நாடகாவில் நடக்கும் தேர்தல் தான். அவர்களுக்கு தமிழகத்தில் கருகும் பயிர்கள் முக்கியம் அல்ல. தேர்தலுக்காக காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை தள்ளி போடுவது கேவலமான செயல். தேசியம் பேசும் மத்திய அரசு தாய்மை உணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாவிட்டால், அதன் விளைவுகள் வேறு விதமாக இருக்கும் என்றார்.

Next Story