குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை


குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலை சீரமைக்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 3 May 2018 10:15 PM GMT (Updated: 3 May 2018 7:04 PM GMT)

ராயப்பன்பட்டியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கும் சாலையை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உத்தமபாளையம்

உத்தமபாளையத்தை அடுத்த ராயப்பன்பட்டியில் 15 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் விவசாயிகளாகவே உள்ளனர். சிறந்த மண்வளம், வாழை விவசாயத்திற்கு ஏற்றது போல் தட்பவெப்ப நிலை நிலவுவதால் இங்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் வாழைத்தார்களை தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் விவசாயிகள் அனுப்பி வைக்கின்றனர்.

இதனால் விவசாயிகள் தோட்டங்களுக்கு சென்று வர நபார்டு வங்கி உதவியுடன் ராயப்பன்பட்டியில் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை மூலம் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தங்களது தோட்டங்களுக்கு சென்று வருகின்றனர். அந்த சாலை தற்போது சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் தோட்டங்களுக்கு செல்லும் விவசாயிகள் தினந்தோறும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சாலையை சீராமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, இங்குள்ள சாலையில் கற்கள் பெயர்ந்து சாலை முழுவதும் சிதறி கிடக்கின்றன. சாலையை சீரமைக்க வேண்டும் என்று ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சாலையை சீரமைக்க வேண்டும், என்றனர்.

இதுகுறித்து ராயப்பன்பட்டி ஊராட்சி செயலாளர் சுந்தரபாண்டியனிடம் கேட்ட போது, சாலை சீரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சிறப்பு கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஊராட்சியில் போதிய அளவு நிதி இல்லாததால் சாலை அமைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது, என்றார்.

Next Story