பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு கலெக்டர் உத்தரவு


பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய தனிக்குழு  கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 3 May 2018 11:00 PM GMT (Updated: 3 May 2018 7:19 PM GMT)

திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் தனிக்குழு அமைத்து கலெக்டர் டி.ஜி.வினய் உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தற்போது தேர்வுகள் முடிவடைந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் தலைமையில் குழு அமைத்து அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

இந்த குழுவினர் தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் உண்டு. ஆய்வின் போது, பாதுகாப்பற்ற முறையில் எந்த பள்ளியாவது இருந்தால் அதனை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 1,320 அரசு பள்ளிகள், 326 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 304 தனியார் பள்ளிகள் என மொத் தம் 1,950 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. பள்ளிக் கல்வி துறை உத்தரவிட்டதை தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளை ஆய்வு செய்ய முதன்மை கல்வி அலுவலர் கோபிதாஸ் தலைமையில் தனிக்குழு அமைத்து கலெக்டர் டி.ஜி. வினய் உத்தரவிட்டுள்ளார்.

அந்த குழுவில் பொதுப்பணித்துறை, தீயணைப்புத்துறை, மின்வாரியம், சுகாதாரம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். மேலும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 2 பேரும் அந்த குழுவில் உள்ளனர். இந்த குழுவினர் மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து வருகின்றனர். அப்போது, பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறைகள், கழிப்பறைகள், போதிய இடவசதி, விளையாட்டு மைதானம் உள்ளதா? எனவும், வகுப்பறை கட்டிடங்களின் உறுதித்தன்மை, மேற்கூரை, மின்சார வயர்கள் பாதுகாப்பாக உள்ளதா? எனவும் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இந்த குழுவினர் அரசு, அரசு உதவிபெறும், தனியார், சி.பி.எஸ்.இ. என அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ஆய்வு முடிந்த பின்னர் இதுகுறித்த அறிக்கை கலெக்டருக்கு சமர்ப்பிக்கப்படும். இதையடுத்து பாதுகாப்பற்ற முறையில் பள்ளிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் அவற்றை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

Next Story