என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க குவிந்த மாணவர்கள்


என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க குவிந்த மாணவர்கள்
x
தினத்தந்தி 4 May 2018 4:15 AM IST (Updated: 4 May 2018 1:41 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள சேவை மையம் மூலம் என்ஜினீயரிங் படிப்புக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்க மாணவர்கள் குவிந்தனர்.

திருப்பூர்

என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கையை இந்த ஆண்டு முதல் ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்கும் வசதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே விண்ணப்பிக்கும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆன்-லைன் மூலமாக விண்ணப்பிக்க சிரமப்படும் மாணவ-மாணவிகள் வசதிக்காக தமிழகத்தில் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் திருப்பூர் மாவட்டத்தில் என்ஜினீயரிங் படிப்புக்கு மாணவர்கள் விண்ணப்பிக்க திருப்பூர் காலேஜ் ரோட்டில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் சேவை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் 30 கணினிகள் அமைக்கப்பட்டு 30 மாணவர்கள் ஒரே நேரத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க தேசிய தகவல் மையம் பிரத்யேகமாக இண்டர்நெட் இணைப்பு வசதி செய்துள்ளது.

அதன்படி நேற்று காலை 9 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் 8.30 மணி முதலே ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோருடன் கல்லூரியில் குவிந்தனர் அவர்களுக்கு ஒரு படிவம் கொடுக்கப்பட்டது. அதில் மாணவர்கள் தங்களது முழு விவரங்கள் எழுதி காத்திருந்து அந்த படிவத்தை கொடுத்து ஆன்-லைனில் விண்ணப்பித்தனர்.

இது குறித்து சேவை மைய பொறுப்பு அலுவலர் கனகராஜ் கூறும் போது, முதல் நாளில் விண்ணப்பிக்க வந்த மாணவர்கள் எண்ணிக்கை அதிக அளவில் இருந்தது. ஆனால் பல மாணவர்கள் ஆதார் கார்டு, ஏ.டி.எம் கார்டு, சாதிச்சான்றிதழ் போன்ற சில ஆவணங்களை கொண்டு வராததால் திருப்பி அனுப்பப்பட்டனர். முதல் நாளான நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். மாணவர்கள் வருகிற 30-ந்தேதி வரை எல்லா நாட்களிலும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் வருகிற நாட்களில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றார்.

Next Story